2 மாத கால அளவிலான இந்த பயிற்சியை முடித்தால் சான்றிதழ்...! தமிழக அரசு அசத்தல் அறிவிப்பு...!
தமிழ்மொழி மற்றும் பண்பாட்டுப் பரப்புரை திட்டத்தின் ஒரு பகுதியாக, பேச்சுத் தமிழ் வகுப்புகளை வழங்கி வருகிறது.
இது குறித்து தமிழக அரசு தனது செய்தி குறிப்பில்; தமிழ் இணையக் கல்விக்கழகம், தமிழ்மொழி மற்றும் பண்பாட்டுப் பரப்புரை திட்டத்தின் ஒரு பகுதியாக, பேச்சுத் தமிழ் வகுப்புகளை வழங்கி வருகிறது. குறிப்பாக, ஒன்றிய அரசுப் பணியாளர்கள், வங்கி ஊழியர்கள், பிற மாநிலத் தொழிலாளர்கள் உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்து தமிழ்நாட்டிற்கு புலம்பெயர்ந்தோருக்கு இந்தி வழியில் பேச்சுத் தமிழ் கற்றுத்தரப்படுகிறது. இதற்காக, இந்திவழிப் பேச்சுத் தமிழ் பாடத்திட்டம் வகுக்கப்பட்டு, அப்பாடங்கள் 14 காணொலிகளாக உருவாக்கப்பட்டுள்ளன.
தற்போது இத்திட்டம், மக்கட்தொகை கணக்கெடுப்பு இயக்குநரகத்தில் பணிபுரியும் வெளி மாநில ஊழியர்களுக்கு வழங்கப்படவுள்ளது. இப்பணியாளர்கள் கணக்கெடுப்பின்போது சரியானத் தகவல்களைப் பெறவும், புதிய சூழலுக்கு ஏற்ப தங்களைத் தயார்படுத்திக் கொள்ளவும், அவர்களின் அன்றாட வாழ்க்கையைச் சுமூகமாக நடத்திச் செல்லவும் தமிழ்மொழியை அவர்கள் பேசக் கற்றுக்கொள்வது இன்றியமையாததாகும்.
இது தொடர்பாக, இந்தப் பயிற்சியின் முதல் குழுவுக்கான வகுப்பு இராஜாஜி பவனில் உள்ள தமிழ்நாடு மக்கட்தொகை கணக்கெடுப்பு இயக்குநரகத்தில் நேற்று நடைபெற்றது. இப்பேச்சுத் தமிழ் பயிற்சியானது இணையவழியாக நடத்தப்படும். 2 மாத கால அளவிலான இப்பயிற்சியை வெற்றிகரமாக முடிக்கும் பங்கேற்பாளர்களுக்குத் தமிழ் இணையக் கல்விக்கழகம் மூலம் சான்றிதழ் வழங்கப்படும். இப்பேச்சுத் தமிழ் பயிற்சி தொடர்பாக மேலும் விவரங்களுக்கு tva@tn.gov.in. tpktva@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிகளில் தொடர்பு கொள்ளலாம்.