இனி இந்த கவலை இருக்காது.. எரிசாம்பலை மீண்டும் பயன்படுத்தும் மத்திய அரசு அசத்தல் திட்டம்...!
சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் வகையில், அனல் மின் நிலையங்களால் உருவாக்கப்படும் சாம்பலை முறையாக அகற்றுவதற்கும் மறுபயன்பாட்டிற்கும் நிலக்கரி அமைச்சகம் தீவிர நடவடிக்கை எடுத்துள்ளது. நிலக்கரி அடிப்படையிலான மின் உற்பத்தியின் போது எஞ்சும் சாம்பலை அகற்றுவதன் மூலம், அமைச்சகம் ஒரு நிலையான எதிர்காலத்தை நோக்கிய பொறுப்பை வழிநடத்துகிறது. சுற்றுச்சூழலுக்கு முன்னுரிமை அளித்து ஒரு வட்டப் பொருளாதாரத்தை ஏற்படுத்துகிறது.
நிலக்கரி எரிப்பின் சுற்றுச்சூழல் தாக்கத்தைக் குறைக்க, நிலக்கரி அமைச்சகம் சாம்பலை முறையாக அகற்றுவதை ஊக்குவிக்கிறது. கட்டுமானப் பொருட்களில் ஒரு அங்கமாகவும் சாம்பல் திறம்பட பயன்படுத்தப்படுகிறது. இது அதன் சுற்றுச்சூழல் தடத்தைக் குறைப்பது மட்டுமல்லாமல், நிலையான வளர்ச்சி நடைமுறைகளுக்கும் ஆதரவளிக்கிறது.
இந்த நோக்கத்திற்காக சுரங்க வெற்றிடங்களை ஒதுக்கீடு செய்வதன் மூலம் எரிசாம்பலை முறையாக அகற்றுவதை உறுதி செய்வதற்கான குறிப்பிடத்தக்க முன்முயற்சியை நிலக்கரி அமைச்சகம் மேற்கொண்டுள்ளது. இதற்காக நிலக்கரி அமைச்சகத்தின் கூடுதல் செயலாளர் தலைமையில் மத்திய அளவிலான பணிக்குழு 2023-ம் ஆண்டு அமைக்கப்பட்டது. இந்த நடவடிக்கையால், மொத்தம் 19 சுரங்கங்கள் 13 அனல் மின் நிலையங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. இந்த ஒதுக்கீடு எரிசாம்பல் அகற்றலுடன் தொடர்புடைய சுற்றுச்சூழல் கவலைகளை நிவர்த்தி செய்கிறது.