சூரிய வீடு இலவச மின்சாரத் திட்டத்தின் கீழ் ரூ.60,000 மானியம் கொடுக்கும் மத்திய அரசு...!
தமிழகத்தில் சூரியஒளி மின்திட்டத்தில் மின்நிலையம் அமைக்க இதுவரை 72 ஆயிரம் பேர் விண்ணப்பித்து உள்ளனர்.
நாடு முழுவதும் ஒரு கோடி வீடுகளுக்கு ‘பி.எம். சூர்யகர் - முப்த் பிஜ்லி யோஜனா’ என்ற சூரிய வீடு இலவச மின்திட்டத்தை பிரதமர் மோடி கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கி வைத்தார். இந்தத் திட்டத்தில் சேருபவர்கள் இரண்டு கிலோ வாட் உற்பத்தி திறன் கொண்ட சூரிய சக்தி அலகை அமைத்தால், 60 சதவீத மானியம் கிடைக்கும். இரண்டு முதல் 3 கிலோ வாட் உற்பத்தித் திறனுக்கு கூடுதலாக 40 சதவீதம் மானியம் வழங்கப்படும். அதிகபட்ச வரம்பு 3 கிலோ வாட் உற்பத்தி திறன் ஆகும்.
ஒரு கிலோ வாட் அமைப்புக்கு ரூ.30,000 மானியம் கிடைக்கும். இரண்டு கிலோ வாட் அமைப்புக்கு ரூ. 60,000-ம், 3 கிலோ வாட் மற்றும் அதற்கு மேல் அமைக்கப்படும் அலகுக்கு ரூ.78,000-ம் மானியம் வழங்கப்படும். அதற்கு மேல் ஒவ்வொரு கிலோவாட்டுக்கும் ரூ.18 ஆயிரம் மானியம் வழங்கப்படுகிறது. இதற்கு மத்திய அரசின் சூரியவீடு இலவச மின்திட்ட இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும். மின்நிலையம் அமைக்கும் பணி முடிவடைந்ததும் பயனாளியின் வங்கிக் கணக்கில் மானியத் தொகை செலுத்தப்படும்.
தமிழகத்தில் சூரியஒளி மின்திட்டத்தில் மின்நிலையம் அமைக்க இதுவரை 72 ஆயிரம் பேர் விண்ணப்பித்து உள்ளனர். அதில், 19 ஆயிரம் பேருக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு உள்ளது. அவர்களில் 15 ஆயிரம் பேரின் வீடுகளில் 50 மெகாவாட் அளவுக்கு சூரியசக்தி மின்நிலையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. வீடுகளில் சூரியசக்தி மின்நிலையம் அமைக்கப்படுவதால் மின்கட்டண செலவு குறையும், மத்திய அரசின் திட்டத்தில் 25 லட்சம் வீடுகளில் சூரியசக்தி மின்நிலையம் அமைக்க திட்டமிட்டுள்ளது தமிழக அரசு.