EB Bill : அதிரடி...! மின்சார விதிகள் 2020-ல் திருத்தங்களை மேற்கொள்ள மத்திய அரசு ஒப்புதல்...! முழு விவரம் இதோ..
மின்சார (நுகர்வோர் உரிமைகள்) விதிகள் - 2020 இல் திருத்தங்களை மேற்கொள்ள மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
மின்சார (நுகர்வோர் உரிமைகள்) விதிகள் - 2020 இல் திருத்தங்களை மேற்கொள்ள மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. திருத்தங்களை வெளியிட்ட மத்திய மின்சாரம், புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறை அமைச்சர் ஆர்.கே.சிங், இந்தத் திருத்தங்கள் புதிய மின் இணைப்புகளைப் பெறுவதற்கான காலக்கெடுவை மேலும் குறைக்கும் என்றார். மேற்கூரை சூரிய சக்தி அமைப்புகளை நிறுவுவதற்கான செயல்முறைகளை இவை எளிதாக்குகின்றன என்றும் அவர் கூறினார்.
அடுக்குமாடிக் குடியிருப்புகளில் வசிக்கும் நுகர்வோர் தங்களது இணைப்பு வகையைத் தேர்ந்தெடுக்க இந்த திருத்தங்கள் அதிகாரம் அளிக்கின்றன என்றும், பொதுவான பகுதிகளுக்கு தனி பில்லிங் மற்றும் குடியிருப்பு சங்கங்களில் பேக்-அப் ஜெனரேட்டர்கள் இருப்பதை இது உறுதி செய்கிறது என்றும் அவர் தெரிவித்தார். இதன் மூலம் வெளிப்படைத்தன்மை அதிகரிக்கும் என்று அவர் குறிப்பிட்டார்.
மேற்கொள்ளப்பட்டுள்ள பிரதான திருத்தங்கள்:
மேற்கூரை சூரிய சக்தி அமைப்புகளை எளிதாகவும் விரைவாகவும் நிறுவுவதற்கு வசதி செய்யப்பட்டுள்ளது. மேற்கூரை சூரிய சக்தி ஒளி அமைப்புகளை விரைந்து நிறுவுவதற்கு ஏதுவாக விதிகளில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. 10 கிலோவாட் திறன் வரையிலான அமைப்புகளுக்கு தொழில்நுட்ப சாத்தியக்கூறு ஆய்வின் தேவைக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. 10 கிலோவாட்டுக்கும் அதிகமான திறன் கொண்ட அமைப்புகளுக்கு, சாத்தியக்கூறு ஆய்வை முடிப்பதற்கான காலக்கெடு இருபது நாட்களில் இருந்து பதினைந்து நாட்களாக குறைக்கப்பட்டுள்ளது. மேலும், குறிப்பிட்ட காலத்திற்குள் ஆய்வு முடிக்கப்படாவிட்டால், ஒப்புதல் வழங்கப்பட்டதாகக் கருதப்படும்.
மின்சார வாகன சார்ஜிங் நிலையங்களுக்கு தனி இணைப்புகள். நுகர்வோர் தங்கள் மின்சார வாகனங்களை (EV) சார்ஜ் செய்ய தனி மின் இணைப்புகளைப் பெறலாம். புதிய இணைப்புகள் மற்றும் ஏற்கனவே உள்ள இணைப்புகளில் மாற்றங்கள் செய்யும் பணிகளை விரைவாக மேற்கொள்ள வேண்டும்.
இவ்விதிகளின் கீழ் புதிய மின் இணைப்பு பெறுவதற்கான கால அவகாசம் பெருநகரங்களில் ஏழு நாட்களிலிருந்து மூன்று நாட்களாகவும், இதர நகராட்சி பகுதிகளில் பதினைந்து நாட்களிலிருந்து ஏழு நாட்களாகவும், ஊரகப் பகுதிகளில் முப்பது நாட்களிலிருந்து பதினைந்து நாட்களாகவும் குறைக்கப்பட்டுள்ளது. இருப்பினும், மலைப்பாங்கான நிலப்பரப்பைக் கொண்ட கிராமப்புறங்களில், புதிய இணைப்புகள் அல்லது தற்போதுள்ள இணைப்புகளில் மாற்றங்களுக்கான கால அளவு முப்பது நாட்களாக இருக்கும்.
English Summary: Central Government approves amendments in Electricity Rules 2020