’செல்போன் பயன்படுத்துவதால் தண்டுவடம் பாதிக்குமாம்’..!! ஆய்வு முடிவில் அதிர்ச்சி தகவல்..!!
அத்தியாவசிய தேவையாகக் கருதப்படும் ஃபோன் அழைப்புகளை தவிர்த்து, கேமரா பயன்பாடு, விளையாட்டுகள், சமூக வலைதள பயன்பாடு என்று வெறுமனே பொழுதுபோக்கு அம்சமாக ஸ்மார்ட்ஃபோன்கள் பார்க்கப்பட்ட காலமெல்லாம் மலையேறி விட்டது. நம் இயல்பு வாழ்க்கையோடு ஒன்றிவிட்ட ஸ்மார்ட்ஃபோன் இல்லாமல் இன்றைக்கு ஓரிரு நாட்களை கடத்துவதை பலரால் யோசித்து கூட பார்க்க முடியாது.
ஆமாம், எந்த வயதினரும், சமூகத்தின் எந்தப் பிரிவு மக்களும் இன்றைக்கு ஸ்மார்ட்ஃபோன் பயன்படுத்துவதை முற்றிலுமாக ஒதுக்கி தள்ளிவிட முடியாது. பள்ளி, கல்லூரி மாணவர்கள், அலுவலகப் பணியாளர்கள், சுயதொழில் செய்வோர் என்று பலருக்கும் அத்தியாவசியத் தேவைகளில் ஒன்றாக ஸ்மார்ட்ஃபோன் இருக்கிறது.
எந்த வகையிலும் ஸ்கிரீன் பயன்பாட்டை நாம் தவிர்க்க முடியாத நிலையில், இதனால் ஏற்படும் விளைவுகள் குறித்து பிரேசில் நாட்டைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு மேற்கொண்டனர். 3 மணி நேரத்திற்கும் மேலாக ஸ்கிரீன் பயன்பாடு இருக்கும் பட்சத்தில் அதனால் ஏற்படும் விளைவு குறித்து ஆய்வு செய்யப்பட்டது. 14 வயது முதல் 18 வயதுடைய மாணவ, மாணவிகளை கொண்டு இந்த ஆய்வு நடத்தப்பட்டது.
இதில் தண்டுவட எலும்புப் பகுதியில் அசௌகரியம், முதுகின் நடுப்பகுதியில் வலி போன்றவை பொதுவான பிரச்சனைகளாக இருப்பது தெரியவந்தது. சின்ன குழந்தைகள், வளர் இளம் பருவத்தினருக்கு தண்டுவட வலி ஏற்பட செல்ஃபோன் பயன்பாடு, உடல் இயக்கமற்ற வாழ்க்கை முறை போன்றவைதான் காரணம் என ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.