அண்ணா பல்கலை மாணவி பாலியல் வன்கொடுமை...! ஆளுநரை சந்தித்து பாஜக மகளிரணி மனு...!
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும் என முன்னாள் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் வலியுறுத்தி உள்ளார்.
தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. குற்றவாளிகள் திமுகவினராக இருப்பதால், பெரும்பாலும் உடனுக்குடன் நடவடிக்கை எடுக்காமல் தாமதப்படுத்தி, குற்றத்தை மூடி மறைக்க முயல்கிறது திமுக தரப்பு. அண்ணா பல்கலைக்கழக மாணவி மீதான பாலியல் தாக்குதல் வழக்கில் கைது செய்யப்பட்ட திமுக நிர்வாகியுடன் செல்போனில் பேசியவர் யார் என்ற உண்மையை மறைக்க முயல்கிறார்கள்.
மேலும், பாதிக்கப்பட்ட மாணவி குறித்த தனிப்பட்ட விவரங்களைக் கசியவிட்டு, குற்றவாளிகள் மீது புகார் கொடுக்க அச்சப்படும் அளவுக்கு மறைமுகமாக மிரட்டியும், தரம் தாழ்ந்தும் சென்று கொண்டிருக்கிறது திமுக அரசு என பாஜக குற்றம் சாட்டியுள்ளது. திமுக அரசின் பெண்கள் விரோதச் செயல்பாடுகளைக் கண்டித்தும், அண்ணா பல்கலைக்கழக மாணவி பாதிக்கப்பட்ட வழக்கில் முழு உண்மையும் வெளிக்கொணர வலியுறுத்தியும், தமிழக பாஜக மகளிரணி சார்பில் நீதிகேட்புப் பேரணி நடைபெற்றது.
முன்னாள் ஆளுநர் டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன் அவர்கள், பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் குஷ்பு சுந்தர் அவர்கள் மற்றும் கட்சியின் பிற மூத்த உறுப்பினர்களுடன் ஆளுநர் ரவியை சந்தித்து, பெண்கள் பாதுகாப்பு மற்றும் மாநில அரசின் செயலற்ற தன்மை குறித்து கடுமையான பிரச்சினைகளை எழுப்பினர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தமிழிசை சௌந்தரராஜன் அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும். யார் அந்த சார்..? என்பதை கண்டறிய வேண்டும். விசாரணை நியாயமான முறையில் நடைபெற வேண்டும் என தெரிவித்தார்.