கொத்து கொத்தாக மரணம்...! கள்ளச்சாராய வழக்கை CBI விசாரிக்க வேண்டும்...! நிர்மலா சீதாராமன் அதிரடி
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய வழக்கை சிபிஐ வசம் ஒப்படைக்க வேண்டும் என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் வலியுறுத்தி உள்ளார்.
கள்ளக்குறிச்சி நகராட்சிக்குட்பட்ட கோட்டைமேடு கருணாபுரத்தைச் சேர்ந்தவர்கள் கடந்த 18 மற்றும் 19-ம் தேதி மெத்தனால் கலந்த கள்ளச் சாராயம் அருந்தியதில் உடல் நிலை பாதிக்கப்பட்டனர். இதையடுத்து, கள்ளக்குறிச்சி, சேலம், புதுச்சேரி மற்றும் விழுப்புரம் மாவட்ட அரசு மருத்துவமனைகளில் நேற்று வரை மொத்தம் 211 பேர் அனுமதிக்கப்பட்டனர். இது வரை 4 பெண்கள், ஒரு திருநங்கை உட்பட 57 பேர் உயிரிழந்துள்ளனர்.
கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 106 பேர், சேலம் அரசு மருத்துவமனையில் 30 பேர், விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 4 பேர் மற்றும் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் 17 பேர் என 157 பேர் சிகிச்சையில் உள்ளனர். சேலம் அரசு மருத்துவமனையில் 8 பேருக்கு வெண்டிலேட்டரில் வைத்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய வழக்கை சிபிஐ வசம் ஒப்படைக்க வேண்டும் என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் வலியுறுத்தி உள்ளார்.
இது குறித்து பேசிய அவர்; கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்தவர்களில் 57 பேர் இறந்துள்ளனர். பலர் உயிருக்குப் போராடி வருகின்றனர். அவர்களில் பெரும்பாலோர் பட்டியலின மக்கள். இந்த சம்பவத்தை கண்டிக்கிறேன். இதற்கு எதிராக காங்கிரஸ் ஒரு வார்த்தை கூட பேசாதது எனக்கு அதிர்ச்சி அளிக்கிறது. தமிழக அரசால் நடத்தப்படும் ‘டாஸ்மாக்’ எனப்படும் கடைகளில் உரிமம் பெற்ற மதுபானங்கள் கிடைக்கும் நிலையில், அதையும் மீறி கள்ளக்குறிச்சி நகரின் மையத்தில் ரசாயனம் கலந்த சட்டவிரோத கள்ளச் சாராயம் கிடைக்கிறது.
இதற்கு எதிராக காங்கிரஸ் ஒரு வார்த்தை கூட பேசவில்லை. காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே எங்கே?. ராகுல் காந்தி எங்கே?. கள்ளச் சாராயத்தால் பட்டியலின மக்கள் இறக்கும் போது, ராகுல் காந்தியிடம் இருந்து எந்த எதிர்ப்பும் இல்லை. கள்ளக்குறிச்சி கள்ளச் சாராய வழக்கை சிபிஐ வசம் ஒப்படைக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.