நீட் தேர்வு முறைகேடு விவகாரம் : வழக்குப்பதிவு செய்தது CBI..!!
மருத்துவ படிப்பிற்கான நீட் நுழைவுத்தேர்வில் முறைகேடுகள் மற்றும் வினாத்தாள் வெளியானதாக எழுந்த புகார் தொடர்பாக சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்துள்ளது.
நாடு முழுவதும் கடந்த ஜூன் 4ம் தேதி வெளியான நீட் தேர்வு முடிவுகள் பல்வேறு விவாதங்களை எழுப்பி உள்ளது. நீட் தேர்வில் வினாத்தாள்கள் கசிய விடப்பட்டதாகவும், முறைகேடாக மதிப்பெண்கள் வழங்கப்பட்டிருப்பதாகவும் மாணவர்கள் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றனர். இந்த விவகாரம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளதோடு, தேர்வுகளை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகளும் வலுத்து வருகிறது.
நீட் நுழைவுத் தேர்வு வினாத்தாளை முன்கூட்டியே விற்பனை செய்ததாக உத்தரபிரதேசம், பீகார், ஜார்க்கண்ட் மாநிலங்களில் பலரும் கைது செய்யப்பட்டு வருகின்றனர். உச்சநீதிமன்றத்திலும் இது தொடர்பான வழக்கு நிலுவையில் உள்ளது. மேலும் நீட், நெட் உள்ளிட்ட பொதுத்தேர்வுகள் முறைகேடுகளைத் தடுக்க மத்திய அரசு ஒரு உயர்நிலைக் குழுவை இஸ்ரோ முன்னாள் தலைவர் ராதாகிருஷ்ணன் தலைமையில் அமைத்துள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக சி.பி.ஐ., விசாரணைக்கு மத்திய கல்வித்துறை அமைச்சகம் உத்தரவிட்டது. இதனை ஏற்று, நீட் தேர்வில் நடந்த முறைகேடு மற்றும் குளறுபடி தொடர்பாக சி.பி.ஐ. அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கியுள்ளனர்.
Read more ; RTO ஆபீஸ் போகாமல் லைசென்ஸ் வாங்க முடியும்!! எப்படி தெரியுமா?