கேஆர்எஸ் அணையில் இருந்து சீறிப்பாய்ந்தது வரும் காவிரி நீர்..!! 77,000 கனஅடி நீர் திறப்பு..!!
காவிரியின் குறுக்கே கர்நாடகா கட்டிய கிருஷ்ணராஜ சாகர் அணை (கேஆர்எஸ்) முழு கொள்ளளவை எட்டியிருக்கிறது. இதையடுத்து, கேஆர்எஸ் அணையில் இருந்து வினாடிக்கு 70,850 கனஅடி நீரை காவிரியில் கர்நாடகா அரசு திறந்துவிட்டுள்ளது. அதே நேரத்தில் கபினி, நுகு அணைகளில் இருந்து காவிரியில் நீர் திறப்பை கர்நாடக அரசு குறைத்துள்ளது. காவிரியில் கர்நாடகா நீர் திறந்துவிட்டிருப்பதால், ஒகேனக்கல்லில் வெள்ளம் சீறிப் பாய்ந்து கொண்டிருக்கிறது.
கேரளா, கர்நாடகாவில் இடைவிடாமல் பெய்த தென்மேற்கு பருவமழையால் காவிரியின் துணை நதியான கபிலா, காவிரி ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டோடியது. கபிலா ஆற்றின் குறுக்கே கர்நாடகா கட்டியுள்ள கபினி அணைதான் முதலில் நிரம்பியது. கபினி மற்றும் அதன் கீழ் அணையான நுகு அணைகளில் இருந்து வினாடிக்கு 70,000-க்கும் அதிகமான கனஅடி நீரை காவிரியில் கர்நாடகா திறந்துவிட்டது.
மேலும், குடகு மாவட்டத்திலும் கனமழை கொட்டியது. இதனால் மண்டியா அருகே கட்டப்பட்டுள்ள கிருஷ்ணராஜ சாகர் அணையும் வேகமாக நிரம்பியது. இந்த அணை நேற்று முழு கொள்ளளவை எட்டியது. கிருஷ்ணராஜ சாகர் அணையின் முழு கொள்ளளவு 124.80 அடியாகும். கிருஷ்ணராஜ சாகர் அணையும் முழுமையாக நிரம்பியதால் தமிழ்நாட்டுக்கு 77,000 கன அடிநீரை கர்நாடகா திறந்துவிட்டுள்ளது. மேலும் கபினி, நுகு அணைகளுக்கான நீர்வரத்து குறையத் தொடங்கிவிட்டதால் நீர் திறப்பும் குறைந்துள்ளது.
காவிரியில் கர்நாடகா அதிகளவு நீரை ஒரே நேரத்தில் திறந்துவிட்டிருப்பதால், தமிழ்நாட்டின் ஒகேனக்கல் வழியாக மேட்டூர் அணைக்கான நீர்வரத்தும் அதிகரித்துள்ளது. ஒகேனக்கல்லில் பாறைகளை மூழ்கடிக்கும் நிலைமையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் காவிரி கரையோர கிராமங்கள் அனைத்துக்கும் முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.