சாதிவாரி கணக்கெடுப்பு..!! பாஜகவோடு பாமக கூட்டணி வைத்தது எப்படி..? எடப்பாடி பழனிசாமி கேள்வி..!!
சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த மாட்டோம் என கூறிய பாஜகவோடு பா.ம.க. எப்படி கூட்டணி வைத்தது? என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பி உள்ளார்.
அரக்கோணத்தில் அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி பிரசாரம் மேற்கொண்டார். அரக்கோணம் தொகுதி வேட்பாளர் ஜெயசீலனை ஆதரித்து அவர் வாக்கு சேகரித்தார். அப்போது பேசிய அவர், ”பொய் வழக்குகள் போட்டு நேரத்தை வீணடிக்காமல், ஒரு நிமிடம் ஆட்சியில் இருந்தாலும் அது மக்களுக்கு பயனுள்ளதாக இருக்க வேண்டும். மற்றவர்கள் எல்லாம் தேர்தல் பத்திரம் மூலம் பணம் வாங்குகிறார்கள் என்று கூறும் ஸ்டாலின், சூதாட்டம் நடத்தும் ஆன்லைன் ரம்மி நிறுவனத்திடமிருந்து 509 கோடி ரூபாய் தேர்தல் பத்திரம் வாங்கியது ஏன்?
நாங்கள் ஏன் பாஜகவை எதிர்க்கவில்லை.. நாங்கள் ஏன் மோடியை எதிர்க்கவில்லை என்று கேட்கிறார்கள். நாங்களா ஆளுங்கட்சியாக இருக்குறோம்? எதிர்க்கட்சியாக இருக்கும் எங்களால் எப்படி மோடியை எதிர்க்க முடியும். நீங்கள்தான் எதிர்க்க வேண்டும். நாங்கள் பா.ஜ.க. கூட்டணியை முறித்ததால் உங்களுக்கு ஏன்? பயம் வருகிறது. எந்த கொம்பனாலும் இரட்டை இலை சின்னத்தை தொட்டு கூட பார்க்க முடியாது. இது தெய்வத்தால் உருவாக்கப்பட்ட சின்னம். தெய்வ சக்தி பெற்ற சின்னம். அதை யாராலும் அழிக்கவே முடியாது.
பெண்களை மதிக்கின்ற கட்சி அதிமுக தான். பெண்களை இழிவுபடுத்தி பேசும் கட்சி திமுக தான். மக்களை சந்திக்காத பொம்மை முதல்வர். தேர்தலின் போது தான் முதல்வர் ஸ்டாலின் டீக்கடையை பார்க்கிறார். கும்பகர்ணன் தூக்கத்தில் இருக்கும் முதல்வர் இனியாவது விழித்துக்கொள்ள வேண்டும்” என்று பேசினார்.
மேலும் பேசிய அவர், ”சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த மாட்டோம் என கூறிய கட்சி பா.ஜ.க., அந்த கட்சியோடு பா.ம.க. எப்படி கூட்டணி வைத்தது? ஆனால், சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த அரசாணை பிறப்பித்தது நான்தான். ஆனால், தி.மு.க. அரசு கண்டுகொள்ளாததால் காலாவதியாகிவிட்டது. நான்தான் ஜிஓ போட்டேன். ஆனால் பாமக என்னவோ பாஜகவோடு போய்விட்டது” என்றார்.