22 இடங்களில் நடத்திய சோதனை... சிக்கியது கோடிக்கணக்கான பணம்...! ED கொடுத்த தகவல்...!
லாட்டரி மார்ட்டின் தொடர்புடைய 22 இடங்களில் நடத்திய சோதனையில் 12.41 கோடி ரூபாய் ரொக்கப்பணம் சிக்கியுள்ளது.
சிக்கிம் மாநில அரசின் லாட்டரி சீட்டுகளை முறைகேடாக அச்சடித்து விற்பனை செய்து வருமானம் ஈட்டியதாக, கோவையைச் சேர்ந்த பிரபல தொழிலதிபர் மார்ட்டின் மீது புகார்கள் எழுந்தன. தொடர்ந்து வருமான வரித் துறை, அமலாக்கத் துறை அதிகாரிகள் அவருக்கு சம்பந்தப்பட்ட இடங்களில் பலமுறை சோதனை மேற்கொண்டனர். ஏற்கெனவே நடந்த சோதனைகளைத் தொடர்ந்து, பல கோடி மதிப்பிலான சொத்துகள் முடக்கப்பட்டன. இந்நிலையில், கடந்த 14-ம் தேதி முதல் மார்ட்டின் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத் துறையினர் சோதனை நடத்தி வந்தனர்.
அதேபோல, சாய்பாபாகாலனி மற்றும் சிவானந்தாபுரம் ஆகிய இடங்களில் உள்ள, மார்ட்டினின் மனைவி லீமாரோஸ் மார்டினின் உறவினர்களுக்குச் சொந்தமான இடங்களிலும் அமலாக்கத் துறையினர் சோதனை நடத்தினர். மொத்தம் 5 இடங்களில் சோதனை நடந்தது. அப்போது, துப்பாக்கி ஏந்திய துணை ராணுவத்தினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.
தமிழகம், மேற்கு வங்கம், கர்நாடகா, உத்தரபிரதேசம், மேகாலயா, பஞ்சாப் மாநிலங்களில், மார்ட்டின் தொடர்புடைய 22 இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. இதில் 12.41 கோடி ரூபாய் ரொக்கப்பணம் சிக்கியது. ஏராளமான ஆவணங்கள், 6.42 கோடி ரூபாய் மதிப்புக்கு பிக்சட் டிபாசிட் ஆவணங்களும் சிக்கியுள்ளன. ஆவணங்கள் அடங்கிய டிஜிட்டல் கருவிகளும் சிக்கியுள்ளன என்று அமலாக்கத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.