அதிரடி..! இனி பிச்சை போடும் நபர்கள் மீது வழக்கு பதிவு... ஜனவரி 1 முதல் அமலுக்கு வரும் ரூல்ஸ்...!
மத்தியப் பிரதேச மாநிலத்தின் இந்தூர் மாவட்ட ஆட்சியர், யாசகர்கள் இல்லாத நகரத்தை உருவாக்க ஜனவரி 1 முதல் புதிய முயற்சியில் ஈடுபட்டு உள்ளது. இந்தூர் நகரில் ஜனவரி 1 முதல் யாசகர்களுக்கு யாராவது யாசகம் செய்தால் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்படும் என மாவட்ட நிர்வாகம் அறிவித்திருக்கிறது.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய இந்தூர் மாவட்ட ஆட்சியர் ஆஷிஷ் சிங்; இந்தூரில் யாசகம் எடுப்பதற்கெதிராக மாவட்ட நிர்வாகம் தடை உத்தரவு பிறப்பித்திருக்கிறது. யாசகம் எடுப்பதற்கெதிரான எங்களின் பிரசாரமும் இம்மாதம் இறுதிவரையில் நடைபெறும். அதோடு, வரும் ஜனவரி 1 முதல் யாராவது யாசகம் செய்வது கண்டுபிடிக்கப்பட்டால் அவர்கள் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்படும். யாசகம் செய்வதன் மூலம் பாவத்தில் பங்கெடுக்க வேண்டாம் என இந்தூரில் வசிப்பவர்களிடம் கேட்டுக்கொள்கிறேன். ஏனெனில், அது அவர்களை அப்படியே பழக்கப்படுத்தும். மக்களை யாசகம் எடுக்கவைக்கும் பல்வேறு கும்பலை மாவட்ட நிர்வாகம் சமீப காலங்களில் வெளிக்கொண்டு வந்திருக்கிறது. மேலும், மீட்கப்பட்டவர்களுக்கு மறுவாழ்வு அளிக்கும் முயற்சிகளும் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்றார்.
மத்திய அரசின் திட்டம்:
கொத்தடிமைத் தொழிலாளர்களுக்கு மறுவாழ்வு அளிக்கும் பணியில் மாநில அரசுகளுக்கு உதவும் வகையில், தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் கொத்தடிமை தொழிலாளர்களுக்கான மறுவாழ்வு என்னும் மத்திய அரசின் திட்டம் ஒன்றைச் செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்தின் கீழ், மீட்கப்பட்ட ஆண் கொத்தடிமைத் தொழிலாளியின் மறுவாழ்வுக்கு ரூ.1 லட்சம், ஆதரவற்ற குழந்தைகள் உள்ளிட்ட குழந்தைகள் அல்லது அமைப்பு மற்றும் கட்டாய பிச்சை எடுப்பது அல்லது பிற வகையான கட்டாய குழந்தைத் தொழிலாளர்களிலிருந்து மீட்கப்பட்டவர்கள் மற்றும் பெண்கள் போன்ற சிறப்புப் பிரிவு பயனாளிகளுக்கு ரூ.3 லட்சம் வழங்கப்படுகிறது.
மீட்கப்பட்ட கொத்தடிமைத் தொழிலாளர்களுக்கு மாவட்ட நிர்வாகத்தால் ரூ.30,000 உடனடி உதவியாக வழங்கப்படுகிறது. மீட்கப்பட்ட கொத்தடிமைத் தொழிலாளர்களுக்கு மறுவாழ்வு உதவித் தொகை அந்தந்த மாநில மற்றும் யூனியன் பிரதேசங்களால் வழங்கப்படுகிறது, அத்தொகை மத்திய அரசால் ஈடுசெய்யப்படுகிறது.