பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் உள்ளிட்ட 25 பேர் மீது வழக்குப்பதிவு...!
பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது..
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வரும் 19ம் தேதி நாடாளுமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதையடுத்து தமிழகம் முழுவதும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் நடைமுறையில் உள்ளது. அரசு அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகள் கொண்ட தேர்தல் பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளது. இவர்கள் 24 மணிநேரமும் சுழற்சி முறையில் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
சந்தேகத்திற்கிடமான பணம், சட்டவிரோத மதுபானம், போதைப்பொருள், இலவசங்கள் மற்றும் கடத்தப்பட்ட பொருட்கள் வாக்காளர்களுக்கு வழங்கப்படுவதை தடுக்க சோதனைகளை மேற்கொள்ளும் பணியில் ஈடுபட்டுள்ளன. தேர்தல் பிரச்சாரங்களில் ஈடுபடும் அரசியல் கட்சிகள் , மற்றும் சுயேச்சை வேட்பாளர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. 10 மணிக்கு மேல் பிரச்சாரத்தில் ஈடுபடக்கூடாது, மத வழிபாட்டுத் தலங்களில் பிரச்சாரத்தில் ஈடுபடக்கூடாது போன்ற விதிமுறைகள் உள்ளன. இந்த நிலையில் விதிகளை மீறி தேர்தல் பிரசாரம் செய்ததாக நெல்லை பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன், அவரது ஆதரவாளர்கள் உள்ளிட்ட 25 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. விதிகளை மீறி தேர்தல் பிரசாரம் செய்ததாக தேர்தல் அதிகாரிகள் புகார் அளித்தனர். இந்த நிலையில் இரவு 10 மணிக்கு மேல் தேர்தல் பிரசாரம் செய்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.