நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு... கர்நாடக உயர் நீதிமன்றம் இடைக்கால தடை...!
நிர்மலா சீதாராமன் மீதான வழக்கில் இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்.
அரசியல் கட்சிகளுக்கு கார்ப்பரேட் நிறுவனங்கள் வழங்கும் நன்கொடையில் வெளிப்படைத் தன்மை இல்லை என கூறி அதில் சீர்திருத்தம் கொண்டு வருகிறோம் என மத்திய பாஜக அரசு கடந்த 2018 ஆம் ஆண்டு தேர்தல் பத்திரம் என்ற திட்டத்தை அமல்படுத்தியது. இந்த திட்டத்தின் மூலம் தனிநபர்கள் மற்றும் நிறுவனங்கள் தேர்தல் பத்திரங்களை வாங்கி தங்களுக்குப் பிடித்த அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை வழங்கலாம்.
இந்த தேர்தல் பத்திரம் முழுக்க முழுக்க பா.ஜ.க கட்சிக்குச் சாதகமாகவே அமைந்ததாக விமர்சனம் எழுந்தது. 2018 முதல் 2024 ஜனவரி மாதம் வரை ரூ.16,518 கோடி தேர்தல் பத்திரங்கள் விற்பனையானதாகவும்,இதில் பெரும்பான்மை நன்கொடை பாஜகவுக்கு சென்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதுமட்டுமின்றி அமலாக்கத்துறை , சிபிஐ மூலம் தொழிலதிபர்களை மிரட்டி பாஜகவுக்கு தேர்தல் பத்திரங்கள் மூலம் நிதி வழங்கியதாகவும் குற்றம் சாட்டப்பட்டது.
இந்த நிலையில் தேர்தல் பத்திரம் என்ற பெயரில் தொழிலதிபர்களை மிரட்டியதாக கர்நாடகாவை சேர்ந்த ஆதர்ஷ் அய்யர் என்பவர் திலக்நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். ஆனால் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்ய காவல்துறையினர் மறுத்த நிலையில், அவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார். இந்த வழக்கு பெங்களூரு மக்கள் பிரதிநிதிகளின் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உள்ளிட்டோர் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்ய திலக் நகர் காவல்துறைக்கு உத்தரவிட்டது.
இந்த நிலையில் ஜன அதிகார சங்கரஷ சங்கத்தின் துணை தலைவர் ஆதர்ஷ் அய்யர் தாக்கல் செய்த மனுவின்பேரில், பெங்களூருவில் மக்கள் பிரதி நிதிகள் மீதான வழக்கை விசாரிக் கும் சிறப்பு நீதிமன்றம் கடந்த 28- தேதி மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது வழக்குப் பதிவு செய்ய உத்தரவிட்டது. இதையடுத்து திலக் நகர் போலீஸார் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணையை தொடங்கினர். இந்நிலையில் நிர்மலா சீதாராமன் தன் மீதான வழக்கை ரத்து செய்யக்கோரி கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கில் நீதிமன்றம் விசாரணைக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.