பரபரப்பு..! பாஜக மாநில செயலாளர் உள்ளிட்ட 9 பேர் மீது வழக்கு...! கைது செய்ய தேடும் காவல்துறை...!
மத உணர்வுகளை புண்படுத்தும் விதமாக பேசியதாக, பா.ஜ.க மாநில செயலாளர் அஸ்வத்தாமன் உள்ளிட்ட ஹிந்து அமைப்பு நிர்வாகிகள் 9 பேர் மீது காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளது.
நாகப்பட்டினம் அடுத்துள்ள நாகூரைச் சேர்ந்தவர் தங்க முத்துகிருஷ்ணன். சிவசேனா மாநில செயலரான இவரது மனைவி தங்கம் அம்மாள், கடந்த 1995ம் ஆண்டு ஜூலை 3ம் தேதி பார்சல் வெடிகுண்டு வாயிலாக படுகொலை செய்யப்பட்டார். அதையடுத்து, ஆண்டுதோறும் தங்கம் அம்மாள் நினைவு நாள் நிகழ்ச்சி அனுசரிக்கப்பட்டு வருகிறது. பல்வேறு ஹிந்து அமைப்பினர், பல்வேறு அரசியல் கட்சியினர் பங்கேற்று வருகின்றனர்.
கடந்த ஆண்டு போலவே இந்தாண்டும் பிரச்னை ஏற்படலாம். அதனால், இந்தாண்டு நிகழ்ச்சிக்கு அனுமதி வழங்கக் கூடாது என, காவல்துறைக்கு சில முஸ்லிம் அமைப்புகள் சார்பில் அழுத்தம் கொடுக்கப்பட்டன. இதையடுத்து, தங்கம் அம்மாள் நினைவு நாள் கூட்டத்திற்கு, நாகூர் காவல்துறை அனுமதி மறுத்தனர். அதையடுத்து, சிவசேனா மாநில செயலர் தங்க முத்துகிருஷ்ணன், கூட்டம் நடத்த அனுமதி கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். நிபந்தனைகளுடன் கூட்டம் நடத்த அனுமதி அளிக்குமாறு காவல்துறைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதையடுத்து, கடந்த 7ம் தேதி, நாகூரில் தங்கம் அம்மாள் நினைவு நாள் கூட்டம் நடத்தப்பட்டது. தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை கலந்து கொள்ள வேண்டிய அக்கூட்டத்தில், அக்கட்சியின் மாநில செயலர் அஸ்வத்தாமன் பங்கேற்றார். பல்வேறு ஹிந்து அமைப்புகளைச் சேர்ந்தவர்களும் கூட்டத்தில் பங்கேற்று பேசினர். இந்நிலையில், கூட்டத்தில் மத உணர்வுகளை புண்படுத்தும் வகையில் பேசியதாக, சிவசேனா மாநில செயலர் தங்க முத்துகிருஷ்ணன், பா.ஜ.க மாநில செயலர் அஸ்வத்தாமன் உள்ளிட்ட ஒன்பது பேர் மீது, நாகூர் காவல்துறை ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சம்பந்தப்பட்டவர்களை கைது செய்யவும் தேடி வருகின்றனர்.