கேப்டன் பதவி பறிப்பு!… விராட் கோலியுடன் என்ன நடந்தது?… சவுரவ் கங்குலி விளக்கம்!
பிசிசிஐ தலைவராக சவுரவ் கங்குலி பொறுப்பேற்ற போது, இந்திய அணியின் கேப்டனாக விராட் கோலி செயல்பட்டு வந்தார். இவர்கள் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்ட நிலையில், திடீரென டி20 கேப்டன் பதவி, அதன்பின் ஒருநாள் கேப்டன் பதவி என்று கடைசியாக டெஸ்ட் கேப்டன் பதவியில் இருந்தும் விராட் கோலி விலகினார். இதற்கு பிசிசிஐ அரசியலே காரணம் என்று சொல்லப்பட்டு வந்தது. விராட் கோலி கேப்டன்சி பதவியில் இருந்து விலகுவதற்கு சவுரவ் கங்குலியே முக்கிய காரணம் என்று ரசிகர்களிடையே விமர்சனங்கள் எழுந்தன. அதுமட்டுமல்லாமல் ஐபிஎல் தொடரில் விராட் கோலி, சவுரவ் கங்குலியின் கைகளை குலுக்காமல் சென்றது, இன்ஸ்டாகிராமில் பின் தொடர்வதை நிறுத்தியது என்று வெளிப்படையாகவே மோதி கொண்டனர்.
இதன்பின் பிசிசிஐ தலைவர் பதவிக்காலம் முடிவடைந்த பின்னர் சவுரவ் கங்குலி பல்வேறு விஷயங்கள் குறித்து மனம் திறந்துள்ளார். இந்த நிலையில் சவுரவ் கங்குலி பேசுகையில், கேப்டன் பதவியில் இருந்து விராட் கோலி நான் நீக்கவில்லை. அவர் டி20 போட்டிகளில் இந்திய அணியை வழிநடத்த ஆர்வம் காட்டவில்லை. அதனால் ராஜினாமா செய்வதாக கூறிய போது, டி20 கிரிக்கெட்டை கேப்டன்சியை ராஜினாமா செய்ய வேண்டாம் என்று கூறினோம்.
ஒருவேளை டி20 கேப்டன்சியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று நீங்கள் விரும்பினால், மொத்தமாக ஒயிட் பால் கேப்டன்சியில் இருந்தும் விலகிவிடுங்கள் என்று அறிவுறுத்தினோம். ஒயிட் பால் கிரிக்கெட் கேப்டன், டெஸ்ட் கிரிக்கெட் கேப்டன்சி என்று பிரித்து கொள்ளலாம் என்று தான் அவரிடம் கூறியதாக கங்குலி தெரிவித்துள்ளார். அதேபோல் கேப்டன்சியை ஏற்றுக் கொள்ளுமாறு ரோகித் சர்மாவிடம் ஆலோசனை நடத்தியது உண்மைதான்.
ஏனென்றால் இந்திய அணியின் ஒட்டுமொத்த கேப்டன்சியையும் ஏற்றுக்கொள்ள ரோகித் சர்மா விரும்பவில்லை. ரோகித் சர்மா கேப்டன்சியை ஏற்றுக் கொண்டதில் எனது பங்கு கொஞ்சம் உள்ளது. ஆனால் நிர்வாகத்தில் யார் இருக்கிறார்கள் என்பது முக்கியம் கிடையாது. நான் பிசிசிஐ தலைவராக பொறுப்பேற்றது இந்திய அணியை முன் நகர்த்தி கொண்டு செல்வதற்காக தான் என்று தெரிவித்துள்ளார்.