புற்றுநோய் உண்டாக்கும் பஞ்சு மிட்டாய்...! தமிழகத்திலும் விற்பனை செய்ய தடையா...? அமைச்சர் முக்கிய தகவல்...
புதுச்சேரியில் உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் தலைமையில் கடந்த 7-ம் தேதி நடத்தப்பட்ட சோதனையில் ‘பிங்க்’ நிறத்தில் விற்பனை செய்யப்படும் பஞ்சு மிட்டாயில் ‘ரோடமின்-பி’ என்ற ரசாயனம் கலப்பது உறுதி செய்யப்பட்டது. தொடர்ந்து, விற்பனையில் ஈடுபட்ட வடஇந்தியர்கள் குறித்த தகவல்கள் திரட்டப்பட்டன.
புதுச்சேரிக்கு அதிகமானோர் சுற்றுலா வருகின்றனர். அவர்களின் குழந்தைகளைக் குறிவைத்து பஞ்சு மிட்டாய் விற்கப்படுகிறது. குறிப்பாக, கடற்கரைப் பகுதிகளில் பஞ்சு மிட்டாய் அதிக அளவில் விற்கப்படுகின்றன. பஞ்சு மிட்டாய்களில் ரோடமின் பி (RHODAMINE B) என்ற புற்றுநோயை உண்டாக்க கூடிய விஷ நிறமி இருப்பது கண்டறியப்பட்டது. மக்களிடையே இந்த தகவல் அதிர்ச்சியையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இதைத்தொடர்ந்து புதுச்சேரியில் பஞ்சு மிட்டாய் விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் பஞ்சுமிட்டாய் விற்பனைக்கு தடை செய்துள்ளனர். சென்னை உட்பட பல்வேறு நகரங்களில் பஞ்சுமிட்டாய்களை வட மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர்கள் விற்பனை செய்து வரும் நிலையில் அதில் விஷ நிறமி கலந்திருப்பது பெற்றோர்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையில் செய்தியாளர் சந்திப்பில் அமைச்சர் மா.சுப்பிரமணியம் அவர்களிடம் தமிழகத்தில் பஞ்சுமிட்டாய் விற்பனை குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த அவர் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ஆய்வுக்கு அனுப்பப்பட்ட ஆய்வறிக்கை வந்த பிறகு பஞ்சுமிட்டாய் விற்பனை குறித்து அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.