"நீட் தேர்வை ரத்து செய்யுங்கள்" மத்திய அரசுக்கு பாஜக கூட்டணியில் அங்கம் வகிக்கும் மகாராஷ்டிரா அரசு அறிவுறுத்தல்!
முறைகேடு நடந்துள்ளதால் நீட் தேர்வு முடிவுகளை ரத்து செய்ய வேண்டும் என தேசிய மருத்துவ கவுன்சிலுக்கு பாஜக கூட்டணியில் அங்கம் வகிக்கும் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான மகாராஷ்டிரா அரசு அறிவுறுத்தியுள்ளது.
சமீபத்தில் நீட் தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், ஏராளமான முறைகேடுகள் நடந்திருப்பதாக மாணவர்கள் தரப்பில் குற்றம் சாட்டப்பட்டு வருகிறது. குறிப்பாக ஒரே பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்ற 6 மாணவர்கள் முழுமையான மதிப்பெண்கள் பெற்று இருப்பதும், சில மாணவர்களுக்கு நெகட்டிவ் மதிப்பெண்கள் இல்லாமல் முழுமையான மதிப்பெண்கள் வழங்கப்பட்டிருப்பதும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
குறிப்பாக நீட் தேர்வுக்கு எதிராக தொடர்ந்து குரல் எழுப்பி வரும் தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து இதற்கு எதிர்வினை கடுமையாக எழுந்து வருகிறது. இந்த நிலையில் மகாராஷ்டிராவின் மருத்துவக் கல்வி அமைச்சரான ஹசன் முஷ்ரிப் நீட் தேர்வு முடிவுகள் குறித்து கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார். இது குறித்து அவர் தெரிவித்துள்ளதாவது..
“ நீட் தேர்வுகளை நடத்தியதில் முறைகேடு நடந்துள்ளது. தேர்வின் முடிவுகள் மகாராஷ்டிரா மாணவர்கள் இம்மாநிலத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் எம்பிபிஎஸ் படிப்புகளில் சேருவதற்கான வாய்ப்புகளைத் தடுக்கும். இந்த நீட் தேர்வு முடிவுகள் மகாராஷ்டிரா மாநிலத்திற்கு இழைக்கப்பட்ட அப்பட்டமான அநீதி. இதனை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது. எனவே தேர்வு முடிவுகளை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்று நாங்கள் கோருகிறோம். தேவைப்பட்டால் தேசிய மருத்துவ கவுன்சிலுக்கு (NMC) இந்த விஷயத்தை தெளிவுபடுத்த நாங்கள் தயாராக இருக்கிறோம்,” என்று முஷ்ரிப் தெரிவித்துள்ளார்.
Read more ; காதலிக்க மறுத்த பெண்ணின் அந்தரங்க புகைப்படங்களை லீக் செய்த இளைஞன் கைது!