For the best experience, open
https://m.1newsnation.com
on your mobile browser.
Advertisement

”வழக்கை ரத்து செய்யுங்கள்”..!! ஐகோர்ட் உத்தரவுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட் சென்ற அண்ணாமலை..!!

11:25 AM Feb 14, 2024 IST | 1newsnationuser6
”வழக்கை ரத்து செய்யுங்கள்”     ஐகோர்ட் உத்தரவுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட் சென்ற அண்ணாமலை
Advertisement

தன் மீதான அவதூறு வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்ய மறுத்ததை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்துள்ளார் பாஜக தலைவர் அண்ணாமலை.

Advertisement

கடந்தாண்டு அக்டோபர் மாதம் "பேசு தமிழா பேசு" என்ற யூடியூப் சேனலுக்கு பேட்டியளித்த அண்ணாமலை, இந்து மத கலாச்சாரத்தை அழிக்கும் நோக்குடன், தீபாவளி அன்று பட்டாசுகள் வெடிக்கக் கூடாது என்று கிறிஸ்தவ மிஷனரிகளின் துணையுடன் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது என்று தெரிவித்திருந்தார். இதுதொடர்பாக, சேலத்தைச் சேர்ந்த சுற்றுச்சூழல் ஆர்வலரான பியூஸ் மனுஷ், அண்ணாமலைக்கு எதிராக சேலம் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் தனி நபர் புகார் மனு தாக்கல் செய்திருந்தார்.

அதில், இரு மதத்தினர் இடையே மோதலை ஏற்படுத்தும் நோக்கத்துடன் பொய்யான தகவலை பரப்பும் அண்ணாமலை மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும எனக் கோரிக்கை வைத்திருந்தார். இந்த மனுவை விசாரித்த சேலம் நீதிமன்றம், வழக்கு தொடர்பாக நேரில் ஆஜராகும்படி, அண்ணாமலைக்கு சம்மன் அனுப்பி உத்தரவிட்டிருந்தது. இந்த சம்மனை ரத்து செய்ய வேண்டும், நீதிமன்றத்தில் ஆஜராக விலக்கு அளிக்க வேண்டும், வழக்கு விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும், வழக்கை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகளுடன் அண்ணாமலை, சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ், வழக்கை ரத்து செய்ய மறுத்து அண்ணாமலையின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். மேலும், அண்ணாமலைக்கு எதிரான வழக்கை கீழமை நீதிமன்றம் சட்டத்திற்குட்பட்டு பரிசீலிக்கலாம் என்றும் உத்தரவிட்டிருந்தார். அண்ணாமலைக்கு எதிரான வழக்கை நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் ரத்து செய்ய மறுத்ததுடன் கீழ் நீதிமன்றம் பரிசீலனை செய்யலாம் என உத்தரவிட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில், சென்னை ஐகோர்ட் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷின் இந்த உத்தரவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் அண்ணாமலை மேல்முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்துள்ளார். அம்மனுவில், அவதூறு வழக்கில் தனக்கு எதிரான வழக்கு விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளார் அண்ணாமலை. இந்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை விரைவில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Tags :
Advertisement