கையில போன் இருந்தா என்ன வேண்டுமானாலும் பண்ணுவிங்களா?… உயர்நீதிமன்றம் சரமாரி கேள்வி!
முதல்வர், அமைச்சர்கள் குறித்து அவதூறு பதிவிடுவதை ஏற்க முடியாது என்று கூறிய உயர்நீதிமன்ற மதுரை கிளை, செல்போன் இருக்கிறது என்பதற்காக என்ன வேண்டுமானாலும் பதிவிடலாமா? என்று சரமாரி கேள்வி எழுப்பியுள்ளது.
மாநிலம் பெங்களூரு அருகேயுள்ள தனிசந்திரா பகுதியைச் சேர்ந்தவர் விஜில் ஜோன்ஸ். இவர் தனது சமூக வலைதள பக்கங்களில் தமிழ்நாடு முதல்வர் மற்றும் அமைச்சர்கள் குறித்து அவதூறு ஏற்படுத்தும் வகையில் கருத்துக்களை பதிவிட்டுள்ளார்.இது குறித்த புகாரின் பேரில் தக்கலை போலீசார் ஜோன்ஸ் மீது தகவல் தொழில்நுட்ப சட்டம், அவதூறு ஏற்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
இந்த வழக்கில் தனக்கு முன்ஜாமீன் கோரி ஐகோர்ட் மதுரை கிளையில் விஜில் ஜோன்ஸ் மனு செய்தார். அதில், ‘‘முதல்வர் மற்றும் அமைச்சர்களுக்கு அவதூறு ஏற்படுத்தும் வகையில் தான் எந்த கருத்துக்களையும் பதிவிடவில்லை. அரசியல் முன்விரோதம் காரணமாக சிலர் வேண்டுமென்றே புகார் அளித்துள்ளனர்.
போலீசார் முறையாக விசாரிக்காமல், வழக்கு பதிந்துள்ளனர்’’ என கூறியிருந்தார். இந்த மனுவை நேற்று விசாரித்த நீதிபதி எம்.தண்டபாணி, ‘‘தன்னிடம் செல்போன் வசதி உள்ளது என்பதற்காக என்ன வேண்டுமானாலும் பதிவு செய்யலாமா. முதல்வர் மற்றும் அமைச்சர்கள் குறித்து அவதூறு ஏற்படுத்தும் வகையில் கருத்துக்கள் பதிவு செய்வதை ஏற்க முடியாது. சிறைக்கு தான் செல்ல வேண்டும். இந்த மனுவை ஏற்க முடியாது என்பதால், தள்ளுபடி செய்யப்படுகிறது’’ என உத்தரவிட்டுள்ளார்.