’இப்படியெல்லாம் பண்ணலாமா’..? சார் பதிவாளர்களுக்கு வந்த சிக்கல்..!! பாய்கிறதா நடவடிக்கை..?
பொதுமக்களின் நன்மைகளை கருத்தில் கொண்டு, பத்திரப்பதிவுத்துறை பல்வேறு முன்னெடுப்புகளை செய்து வரும் நிலையில், தற்போது மற்றொரு கோரிக்கையும் எழுந்துள்ளது.
இடைத்தரகர்கள் சார் பதிவாளர், பதிவாளர் அலுவலகங்களுக்குள் வரக்கூடாது என்றும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், எல்லாமே இப்போது ஆன்லைன் வழியாகவே பதிவு செய்யப்படுகிறது. இடத்தை வாங்குபவரும், விற்பவரும் பணத்தை பத்திரப்பதிவு அலுவலத்திற்கு கொண்டு வர வேண்டிய அவசியம் இல்லை. இதனால் பொதுமக்களுக்கும் வேலை ஈசியாக முடிகிறது. நாளுக்கு நாள், இப்படி பொதுமக்களின் நன்மைக்காக பல்வேறு வசதிகளை பத்திரப்பதிவு துறை செய்து வருகிறது.
அந்தவகையில், மேலும் சில வசதிகளை தற்போது கொண்டுவந்துள்ளது. அதன்படி, பொதுமக்கள் வரிசையில் காத்திருக்காமல் பத்திரப்பதிவு செய்வதற்கான, "தட்கல்" திட்டமும், கடந்த 2022 முதல் கொண்டுவரப்பட்டது. அதேபோல, சில அலுவலகங்களில் எதிர்பார்த்த அளவுக்கு, சனிக்கிழமைகளில் பத்திரப்பதிவு நடப்பதில்லை என்பதால், இதுகுறித்த புகாரையும் பதிவுத்துறை களைந்திருந்தது. எனினும் தற்போது மீண்டும் ஒரு புகார் கிளம்பி உள்ளது.
அதாவது, சொத்து விற்பனை உள்ளிட்ட பத்திரங்கள், அந்தந்த பகுதியில் உள்ள சார் - பதிவாளர் அலுவலகங்கள் மூலம் பதிவு செய்யப்படுகின்றன. அப்படி பதிவு செய்யப்படும் பத்திரங்களை, ஓரிரு நாட்களுக்குள்ளேயே உரியவர்களுக்கு அளிக்க வேண்டும். அதுமட்டுமின்றி, இப்படி பணி முடித்து திருப்பி தரப்பட்ட பத்திரங்களின் எண்ணிக்கையை, பதிவாளர்கள் கண்காணிக்கவும், கட்டிட கள ஆய்வு பணிகளுக்காக, பத்திரங்களை தாமதப்படுத்தக் கூடாது என்றும் பதிவுத்துறை ஏற்கனவே உத்தரவிட்டுள்ளது.
ஆனால், இந்த உத்தரவை பெரும்பாலான சார் - பதிவாளர்கள் கண்டுகொள்வதில்லையாம். அதுவும் சென்னை, மதுரை, திருச்சி, கோவை மண்டலங்களில் பதிவு முடிந்து விட்டது, பத்திரத்தை நேரில் வந்து வாங்கி கொள்ளுங்கள் என்று வாட்ஸ்அப் மெசேஜ்கள் வருகிறதாம். இதை நம்பி சம்பந்தப்பட்டவர்கள், நேரில் சென்றால், கட்டிட கள ஆய்வு இன்னும் முடியவில்லை என்று சொல்கிறார்களாம். எனவே, கள ஆய்வு முழுமையாக இருந்தால் மட்டுமே, தகவல் தர வேண்டும் என்றும் சார் பதிவாளர்கள் வேண்டுமென்றே மக்களை அலைக்கழிக்கக்கூடாது, இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று கோரிக்கை எழுந்துள்ளது.