பெண்கள் மீது பலாத்கார குற்றச்சாட்டை சுமத்த முடியுமா?… ஆய்வு செய்ய உச்சநீதிமன்றம் ஒப்புதல்!
ஒரு பெண் மீது பலாத்கார குற்றச்சாட்டை சுமத்த முடியுமா என்று யோசித்த உச்சநீதிமன்றம், மருமகள் தொடர்ந்த வழக்கில் 61 வயது மாமியாரை கைது செய்ய தடை விதித்துள்ளது. மேலும், இதுதொடர்பாக ஆய்வு செய்ய நீதிபதிகள் ஒப்புதல் அளித்துள்ளனர்.
பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த இளம்பெண் ஒருவர், அமெரிக்காவில் பணியாற்றும் தூரத்து உறவினரின் மூத்த மகனுடன் காணொலி வழியில் திருமணம் செய்துகொண்ட பின்னர், டெல்லியில் உள்ள தனது விதவை மாமியாரான 61 வயது மூதாட்டியுடன் வாழ்ந்து வந்துள்ளார். இதனிடயே போர்ச்சுகலில் பணியாற்றிவரும் மூதாட்டியின் இளைய மகன் டெல்லி வந்ததும், இளம்பெண்ணுக்கு மூத்த மகனுடன் காணொலி வழியில் நடைபெற்ற திருமண பந்தத்தை முறித்துவிட்டு இளைய மகனுடன் வாழ வற்புறுத்தியுள்ளார். மேலும், இளைய மகன் போர்ச்சுக்கல் திரும்பும்போது, இளம்பெண்ணையும் அங்கு அழைத்துச்சென்று வாழ்க்கை நடத்துவார் என்று மூதாட்டி உறுதியளித்துள்ளார். ஆனால் இளைய மகன் அந்தப் பெண்ணை டெல்லியிலேயே விட்டு சென்றுள்ளார்.
இதன்காரணமாக இருகுடும்பத்தாரிடையே கடும் மோதல் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், பிரச்சனையை சுமூகமாக முடித்துக்கொள்ளவும், மூத்த மகனுடான திருமண உறவை முறைப்படி முறித்துக்கொள்ளவும் இளம்பெண்ணின் குடும்பத்துக்கு மூதாட்டி ரூ.11 லட்சம் இழப்பீடு கொடுக்க முன்வந்துள்ளார். அதனைதொடர்ந்து இளம்பெண் அளித்த புகாரின் அடிப்படையில் மூதாட்டி மற்றும் இளைய மகன் மீது பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கில் முன் ஜாமீன் கோரி மாமியார் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது. இது நேற்று நீதிபதி ஹிரிஷிகேஷ் ராய், சஞ்சய் கரோல் தலைமையிலான அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, மூதாட்டி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், தொடர் பாலியல் வன்கொடுமை குற்றப்பிரிவு 376(என்) தவிர மூதாட்டி மீது பதிவு செய்யப்பட்டுள்ள மற்ற அனைத்து பிரிவுகளும் ஜாமீனில் வெளிவரக்கூடிய குற்றச்சாட்டுகளாகும். மேலும், ஒரு பெண் மீது பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டை சுமத்த முடியாது என்று முந்தைய நீதிமன்ற தீர்ப்பை சுட்டிக்காட்டி வாதிட்டார்.
இதனைக்கேட்ட நீதிபதிகள் அமர்வு, கைது நடவடிக்கையிலிருந்துந்து மூதாட்டிக்கு பாதுகாப்பு அளித்து உத்தரவிட்டனர். அதேநேரம் காவல் துறை விசாரணைக்கு ஒத்துழைப்பு அளிக்கவேண்டும் என்வும் அறிவுறுத்தினர். மேலும் இந்த விவகாரம் குறித்து ஆய்வு செய்ய ஒப்புக்கொண்ட நீதிபதிகள், மூதாட்டியின் முன் ஜாமீன் மனு மீது பஞ்சாப் மாநில அரசு 4 வாரங்களுக்கு பதிலளிக்க நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர்.