கரடிகள் போல் மனிதன் தூங்கினால் நீண்ட நாள் உயிர் வாழ முடியுமா..? ஆய்வு முடிவில் அதிர்ச்சி தகவல்..!!
குளிர்காலத்தில் கரடிகள் ஆழ்ந்த தூக்கத்திற்குச் சென்றுவிடும். இதனால்தான் கரடிகள் ஆரோக்கியமாக வாழ்கிறதா? என விஞ்ஞானிகளும், கால்நடை மருத்துவர்களும் ஆய்வு நடத்தி வருகின்றனர். கரடிகள் வழக்கமாக குளிர் கலத்தில் ஆழ்ந்த உறக்க நிலைக்குச் சென்றுவிடும். இப்படி தூங்காவிட்டால் அவை பல நோய்களால் பாதிக்கப்படும். இது மனிதர்களின் ஆரோக்கியத்திற்கும் பயன்படுமா?
சமீப ஆண்டுகளாக விண்வெளி நிறுவனங்களும் உலகம் முழுவதும் உள்ள ராணுவங்களும் உறக்கநிலை குறித்து தீவிரமாக ஆய்வு செய்து வருகின்றன. எப்படி கரடிகள் மட்டும் குளிர்காலத்தில் நீண்ட நாள் தூங்குவதால் இறக்காமல் உயிர் பிழைக்கின்றன என்ற பதிலை தேடுவதுதான் இவர்களின் நோக்கம். பொதுவாக மருத்துவப்படி, ஆழ்ந்த உறக்கத்திற்கு செல்லும் போது உடலில் பல பிரச்சனைகள் உண்டாகும்.
குறிப்பாக, இதயத்துடிப்பு வெகுவாக குறையும். ஆனால், கரடிகளுக்கு இதுபோன்ற பிரச்சனைகள் எதுவும் ஏற்படுவதில்லை. இதுகுறித்து ஸ்வீடன் மற்றும் டென்மார்க் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் ஒலே ஃப்ரோபெர்ட் ஆய்வு செய்து வருகிறார். இந்த கரடிகள் உயிரியல் தீர்வுக்கான வாழும் நூலகமாக இருப்பதாக கூறுகிறார். பழுப்பு நிற கரடிகள் 8 மாதங்கள் வரை உறக்க நிலையில் இருக்கின்றன. இதேப்போல் மனிதர்களும் தூங்கினால் நிலைமை மோசமாகிவிடும். எலும்புகள் பலவீனமாகிவிடும், தசைகள் சிதைந்துவிடும், தோல் அரிப்பு மற்றும் படுக்கைப் புண் போன்றவை ஏற்படும்.
அனைவரும் கூறுவதுபோல் உறக்கநிலை என்பது உண்மையில் தூக்கம் அல்ல. அதையும் விட தீவிரமானது. சக்தியை பாதுகாக்கும் ஆழ்ந்த நிலை என்றுகூட சொல்லலாம். இதனால் கரடியின் இதயத்துடிப்பு ஒரு நிமிடத்திற்கு 10 முறைக்கும் குறைவாகவே துடிக்கிறது. இதுவே மனிதர்கள் என்றால் ரத்தம் உறைந்துவிடும். ஆனால், கரடிகளுக்கோ எத்தனை மாதங்கள் உறங்கினாலும் ரத்தம் உறைவதில்லை. இதற்கு பதில் தேட ஆய்வாளர்கள் 13 பழுப்பு நிற கரடிகளை கோடை காலத்தில் ஹெலிகாப்டர் மூலம் துரத்தியும், குளிர்காலத்தில் அதன் குகைகளை பின்தொடர்ந்து சென்றும் கரடியின் ரத்த மாதிரிகளை சேகரித்தனர்.
இதை ஆய்வு செய்ததில் HSP47 என்ற குறிப்பிட்ட புரதங்கள் கரடியில் இருப்பதை கண்டறிந்தனர். இந்தப் புரதம் கரடிகளிடம் கோடை காலத்தை விட குளிர்காலத்தில் சற்று அதிகமாகவே இருக்கிறது. இதுதான் அவை குளிர்காலத்தில் உயிர் பிழைப்பதற்கு காரணமாகும். ரத்த தட்டுகளின் மேற்பரப்பில் இருக்கும் இந்த புரதம், ரத்த செல்களை இறுக்கமாக ஒன்றினைக்கின்றன. இதன் காரணமாக காயம் ஏற்பட்டாலும் ரத்தம் கசிவது குறைந்து எளிதில் குணமாகின்றன. ஆனால், அதுவே நரம்புகளுக்குள் ரத்தம் உறைந்து, அது இயற்கையான முறையில் கரையவில்லை என்றால், இறப்பு ஏற்படவும் வாய்ப்புள்ளது.
இந்த HSP47 புரதம் மனிதர்களிடமும் இதே விளைவுகளை ஏற்படுத்துமா எனப் பார்ப்பதற்காக முதுகுத்தண்டில் காயமுள்ளவர்களை பரிசோதித்தனர். ஆனால், இந்த நோயாளிகளிடம் பழுப்பு கரடிகள் போல ரத்தம் உறைவது அதிகமாக காணப்படவில்லை. இவர்களிடம் காயம் இல்லாத நபர்களை விட குறைவான எண்ணிக்கையிலேயே HSP47 புரதம் இருந்தது. இந்நிலையில் தற்போது ஃப்ரோபெர்ட் குழுவினர் ரத்தத்தை உறைய வைக்கும் மருந்துகளை உருவாக்க புதிய ரசாயனத்தை தேடிக் கொண்டிருக்கின்றனர். இந்த மருந்தை உருவாக்க இன்னும் 5 முதல் 10 ஆண்டுகள் ஆகும் என்கின்றனர்.