’ஒரு தமிழன் பிரதமராக முடியுமா’..? ’தயாராக இருங்கள்’..!! ’நாளை நமதே’..!! கமல்ஹாசன் பரபரப்பு பேச்சு..!!
மநீம பொதுக்கூட்டத்தில் பேசிய தலைவர் கமல்ஹாசன் ஒரு தமிழன் பிரதமராக முடியுமா என கேள்வி எழுப்பியதோடு, அதற்கு நாம் தயாராக வேண்டும் என தெரிவித்துள்ளார்.
சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் 2-வது பொதுக்குழு கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் பேசிய கமல்ஹாசன், “நான் இங்கே அமர வரவில்லை. எனக்கு எந்த சீட் கொடுக்கப்பட்டாலும் அதில் அமர்ந்து விட்டேன் என்றால், நான் வேலை செய்யவில்லை என்று அர்த்தம். நாம் நடந்து கொண்டே இருக்க வேண்டும். காந்தி போன்று யார் வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால், அவரைப்போல் ஒரு வீரம் மற்றவரிடம் உள்ளதா என நான் என்னைப் பார்த்து கேட்டுக் கொண்டேன்.
நீங்கள் எல்லாம் ஏன் அரசியலுக்கு வந்தீர்கள்? பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு செல்ல வேண்டாம் எனக் கூறினார்கள். மக்களை நான் நேரடியாக எனது 4 வயது முதல் பார்த்து வருகிறேன். தோற்ற அரசியல்வாதி நான் தான். தோற்பது என்பது நிரந்தரம் அல்ல. அதேபோன்று பிரதமர் பதவியும் நிரந்தரம் அல்ல. ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது மிகவும் ஆபத்தான பேச்சு. அது எவ்வளவு பெரிய கொடுமை என்பதை நாம் உணர வேண்டும். இந்தியாவிற்கு அது தேவைப்படாது.
இந்தியாவிலேயே நேர்மையானவர்கள் என்றால் அது தமிழ்நாடு தான். ஒரு தமிழன் பிரதமராக ஆக முடியுமா? அதற்கு நாம் தயாராக வேண்டும். நிரந்தரமாக அமர முடியாத அசவுகரியமாக இருக்க வேண்டும். அது எந்த அரசாக இருந்தாலும் சரி, ஆட்சியில் இருப்பவர்களாக இருந்தாலும் சரி, இதற்கு முன்பு இருந்தவர்களாக இருந்தாலும் சரி. ஒவ்வொரு 5 ஐந்து ஆண்டுகளும் நாம் தான் தேர்வு செய்ய வேண்டும்.
ஏதாவது ஒரு பிரச்சனை என்றால் மக்கள் நீதி மய்யம் கட்சி காரர்கள் கேட்பாங்க என்று நிலை வேண்டும். இறங்கி வேலை செய்ய வேண்டும். 2026 தேர்தலை நோக்கி செல்ல வேண்டும் என்பதை அன்பு கட்டளையாக எடுத்துக் கொள்ளுங்கள். என்னைக் கேட்டார்கள் என்ன திரும்பவும் சினிமாவிற்கு போய்விட்டார் என்று, பின்ன என்ன நான் கோட்டைக்கு சென்று கஜானா திறக்கவா? என கேட்டேன். ஒரு கூட்டம் நடத்த பணம் தேவைப்படுகிறது. அதனால் தான் சினிமா செல்கிறேன். நாளை நமதாக வேண்டும். அதனை கட்டுவித்த சிற்பியாக நாம் மாற வேண்டும். அதற்கான வேலையை நாம் செய்ய வேண்டும். செய்யுங்கள் நாளை நமதே ஆகும்” என்று பேசினார்.