கல்குவாரி ஏலம்..!! கடுப்பான எடப்பாடி..!! திமுகவினரை இரவோடு இரவாக தூக்கிய போலீஸ்..!!
பெரம்பலூர் மாவட்டம் எளம்பலூர், நாராயண மங்கலம், நாட்டார் மங்கலம், பாடாலூர், கல்பாடி வடக்கு, செங்குணம் உள்ளிட்ட 31 கிராமங்களில் கல்குவாரிகள் செயல்பட்டு வருகிறது. இந்த கல்குவாரிகளில் கற்களை வெட்டி எடுத்து விற்பனை செய்வதற்கான மறைமுக ஏலம் இன்று நடைபெறவிருந்தது. இந்த ஏலத்தில் கலந்து கொள்வதற்கான விண்ணப்பத்தை ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள புவியியல் மற்றும் சுரங்கத்துறை துணை இயக்குநர் அலுவலகத்தில் உள்ள பெட்டியில் போட வேண்டும். இந்த பெட்டியானது இன்று உடைக்கப்பட்டு ஏலம் எடுத்த நபர்களின் பெயர்கள் அறிவிக்கப்படுவதாக இருந்தது.
விண்ணப்பங்களை சமர்பிக்க நேற்று கடைசிநாள் என்பதால் பல்வேறு கட்சிகளை சேர்ந்த ஒப்பந்ததாரர்கள் விண்ணப்பங்களை சமர்பிக்க புவியியல் மற்றும் சுரங்கத்துறையின் துணை இயக்குநர் அலுவலகத்திற்கு வந்தனர். அப்போது திமுகவை சேர்ந்த பிரமுகர்களும் மற்ற நிர்வாகிகளும் மாற்றுக் கட்சியினர் யாரும் ஏலத்தை எடுத்துவிடக் கூடாது என்று கூறி தகராறில் ஈடுபட்டனர். திமுகவினரை தவிர வேறு யாரும் ஏலம் கேட்பதற்கான விண்ணப்பத்தை பெட்டியில் போடக்கூடாது என தடுத்ததாக கூறப்படுகிறது.
இதனால் வாக்குவாதம் முற்றியதால் இருதரப்பினரிடையே மோதம் வெடித்தது. பொதுமக்கள் குறைதீர்கூட்டம் ஆட்சியர் கற்பகம் தலைமையில் நடந்தபோது இந்த பிரச்சனை ஏற்பட்டதால் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் பகுதியில் பெரும் கூச்சல் குழப்பம் நிலவியது. இதையடுத்து, அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கரின் உதவியாளர் மகேந்திரன், திமுவை சேர்ந்த ரமேஷ், கோவிந்த், செல்வம், விஜயகாந்த், தர்மா உள்ளிட்ட 10 பேர் மீது 8 வழக்கு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த மோதலை தொடர்ந்து கல்குவாரி ஏலத்தை தேதி மாவட்ட ஆட்சியர் குறிப்பிடாமல் ஒத்திவைத்தார்.
இந்த சம்பவத்திற்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்திருந்த நிலையில், 12 திமுகவினரை இதுவரை கைது செய்துள்ளதாக பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஷியாமளாதேவி தெரிவித்துள்ளார். இச்சம்பவம் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனி கவனம் செலுத்தி விவரத்தை கேட்டறிந்ததாகவும் கூறப்படுகிறது.