கவனம்...! பட்டாசு வெடிச்சு விபத்து ஏற்பட்டா இந்த இலவச எண்ணுக்கு உடனே கால் பண்ணிடுங்க...!
பட்டாசுகளால் தீவிபத்துக்கள் ஏதேனும் நேரிட்டால், பொதுமக்கள் இலவச தொலைபேசி எண் மூலம் தொடர்பு கொள்ளலாம் என தருமபுரி மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து தருமபுரி மாவட்ட ஆட்சியர் தனது செய்தி குறிப்பில்; உச்ச நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில், தமிழ்நாடு அரசு கடந்த நான்கு ஆண்டுகளாக தீபாவளி பண்டிகையன்று காலை 6 முதல் 7 மணி வரையும், இரவு 7 முதல் 8 மணி வரையில் மட்டுமே ஒலி எழுப்பும் பட்டாசுகளை வெடிப்பதற்கு நேரம் நிர்ணயம் செய்து அனுமதி வழங்கியது. இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை தினத்தன்றும், கடந்த ஆண்டைப் போலவே காலை 6 முதல் 7 மணி வரையிலும், இரவு 7 முதல் 8 மணி வரை மட்டுமே பட்டாசுகளை வெடிக்க வேண்டும்.
பட்டாசுகளை வெடிப்பதற்கு தீக்குச்சிகளையோ அல்லது நெருப்பையோ விட உபயோகிப்பதை நீளமான ஊதுவத்தி உபயோகித்து ஆபத்துகளை தவிர்க்கவும்.கால் நடைகள் அருகில் பட்டாசு வெடிப்பதால் அவைகள் மிரண்டு ஓடும் பொழுது ஸ்கூட்டர்கள், சைக்கிள் ஓட்டுபவர்கள் மீதும், பாதசாரிகள் மீதும் முட்டி விபத்துக்கள் நேரிடலாம், அதை தவிர்க்க வேண்டும். பட்டாசுகளை கையில் பிடித்துக் கொண்டு வெடிக்க கூடாது.
குழந்தைகளை தனியே பட்டாசு வெடிக்க அனுமதிக்க கூடாது. பெரியவர்கள் உடனிருந்து பாதுகாப்பாக வெடிக்க அனுமதிக்க வேண்டும். தண்ணீர் நிரம்பிய வாளியை அருகில் வைத்திருக்க வேண்டும். கம்பி மத்தாப்பு போன்ற பட்டாசுகளை வெடித்த பின்னர் பாதுகாப்பாக இந்த வாளியில் போட வேண்டும். தீக்காயம் ஏற்படும் நேர்வில் உடனடியாக காயத்தின்மீது தண்ணீர் ஊற்ற வேண்டும்.(சுமார் 5 நிமிடங்கள்). உடனடியாக மருத்துவரை அனுகி சிகிச்சை பெற வேண்டும். குப்பை தொட்டி போன்ற கழிவுகள் அருகில் வெடிக்க கூடாது. இதன் காரணமாக தீ விபத்து நேரிடலாம்.
பட்டாசு வெடிப்பதால் உருவாகும் புகையினால் மூச்சுத் திணறல் / சுவாசக் கோளாறுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. புகையானது சுற்றுச்சூழலையும், காற்று மண்டலத்தையும் மாசுபடுத்துவதுடன் அதனால் ஏற்படும் பாதிப்பு குறைய நீண்ட காலம் ஆகும். எனவே, பொது மக்களுக்கும், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கும் தேவையான அளவிற்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும், பட்டாசு வெடிப்பதால் ஏற்படும் ஒலிமாசு, அதிக ஒலி ஏற்படுத்தும் வெடியால் ஏற்படும் தீமைகள் மற்றும் விபத்தில்லா தீபாவளியினைக் கொண்டாடுவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும் சம்பந்தப்பட்டதுறை அலுவலர்களுக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது.
பட்டாசுகளால் தீவிபத்துக்கள் ஏதேனும் நேரிட்டால், பொதுமக்கள் அருகிலுள்ள தீயணைப்பு நிலையத்திற்கும், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இயங்கிவரும் கட்டணமில்லா தொலைபேசி எண்கள் 1077, 108, 18004257016, 18004251071, 8903891077 ஆகியவற்றில் புகார் அளிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.