”டெல்லியில் இருந்து கூடிய விரைவில் அழைப்பு வரும்”..!! பிரதமர் மோடியை சந்தித்த பின் ஓபிஎஸ் பரபரப்பு பேட்டி..!!
திருச்சியில் புதிதாக கட்டப்பட்டுள்ள விமான நிலையத்தை பிரதமர் மோடி நேரில் நேற்று திறந்து வைத்தார். மேலும் 20,140 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்தார். இதற்காக திருச்சிக்கு வருகை தந்த பிரதமர் மோடியை ஆளுநர் ஆர்.என்.ரவி, முதலமைச்சர் முக.ஸ்டாலின் உள்ளிட்டோர் வரவேற்றனர். அதேபோல், தனது ஆதரவாளர்களுடன் ஓ.பன்னீர்செல்வம் பிரதமர் மோடியை வரவேற்றார்.
தொடர்ந்து பாரதிதாசன் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா மற்றும் அரசு நிகழ்ச்சிகளை முடித்துக் கொண்டு பிரதமர் மோடி லட்சத்தீவில் நடைபெற்ற விழாவிற்கு கலந்துகொள்ள செல்லும்போது, விமான நிலையத்தில் வைத்து முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்திடம் பிரதமர் தனியாக பேசியதாக தகவல் வெளியானது.
இந்நிலையில் பிரதமருடனான சந்திப்பு குறித்து செய்தியாளர்களிடம் பேசிய பன்னீர்செல்வம், ”திருச்சி வந்த பிரதமரிடம் அரசியல் எதுவும் பேசவில்லை. என்னுடைய உடல் நலம் குறித்து விசாரித்தார். பிரதமரை வரவேற்கவும், அவரை வழி அனுப்ப மட்டுமே விமான நிலையம் சென்றேன். டெல்லியில் இருந்து விரைவில் அழைப்பு வரும் என எதிர்பார்க்கிறேன். அழைப்பு வந்தால் நிச்சயம் செல்வேன்’’ என்றார்.