CAA| "தமிழ்நாட்டில் குடியுரிமை திருத்தச் சட்டம் அமல்படுத்தப்படாது" - முதலமைச்சர் மு.க ஸ்டாலின் உறுதி.!
இந்திய குடியுரிமை திருத்தச் சட்டம் தமிழகத்தில் அமல்படுத்தப்படாது என முதலமைச்சர் மு.க ஸ்டாலின் திட்டவட்டமாக தெரிவித்திருக்கிறார். மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா அரசு கடந்த 2019 ஆம் ஆண்டு இந்திய குடியுரிமை திருத்த சட்ட மசோதாவை(CAA) பாராளுமன்றத்தில் தாக்கல் செய்து நிறைவேற்றியது.
இந்த மசோதா நிறைவேற்றப்பட்ட நாள் முதல் இதற்கு எதிராக நாடெங்கிலும் பலத்தை எதிர்ப்பு கிளம்பியது. தலைநகர் டெல்லியில் ஷாஹீன்பாக் பகுதியில் மிகப் பெரிய போராட்டம் ஏற்பட்டதோடு நாட்டின் ஒவ்வொரு பகுதியிலும் சிஏஏ சட்டத்திற்கு எதிராக மிகப்பெரிய போராட்டங்கள் வெடித்தது. இதனைத் தொடர்ந்து இந்த சட்டத்தை நிறைவேற்றுவதை ஒத்தி வைத்த மத்திய அரசு தற்போது பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பாக சிஏஏ குடியுரிமை திருத்தச் சட்டத்தை அமல்படுத்தி இருக்கிறது.
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சில தினங்களுக்கு முன்பு பாராளுமன்றத் தேர்தலுக்கு முன்பாக சிஏஏ குடியுரிமை திருத்த சட்டம் நாடு முழுவதும் அமல்படுத்தப்படும் என தெரிவித்திருந்தார். இந்நிலையில் அரசு நாளிதழ் குடியுரிமை திருத்தச் சட்டம் இன்று முதல் அமல்படுத்தப்பட்டதாக தெரிவித்திருக்கிறது. இந்த சட்டத்தின்படி பாகிஸ்தான் பங்களாதேஷ் ஆப்கானிஸ்தான் மியான்மார் போன்ற நாடுகளில் சிறுபான்மையினராக இருந்து இந்தியாவில் அகதிகளாக குடியேறிய இந்துக்கள் கிறிஸ்தவர்கள் பௌத்தர்கள் மற்றும் ஜைனர்கள் ஆகியோருக்கு குடியுரிமை வழங்குவது இந்திய குடியுரிமை திருத்தச் சட்டம் வழி வகுக்குறது.
எனினும் இந்த சட்டம் பிற நாடுகளில் இருந்து அகதிகளாக வரும் இஸ்லாமியர்கள் மற்றும் இலங்கை தமிழர்கள் பற்றிய எந்தவித அறிவிப்பும் இடம்பெறவில்லை. இதனால் இந்த சட்டத்திற்கு தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலும் மிகப்பெரிய எதிர்ப்பு கிளம்பியது . தற்போது நடைமுறைக்கு வந்திருக்கும் இந்த சிஏஏ சட்டத்தை எங்கள் மாநிலத்தில் அமல்படுத்த மாட்டோம் என கேரளா அரசு அறிவித்திருக்கிறது. இதனைத் தொடர்ந்து தமிழ்நாட்டிலும் இந்த சட்டம் அமல்படுத்தப்படாது என முதலமைச்சர் மு.க ஸ்டாலின் திட்டவட்டமாக கூறியிருக்கிறார். மக்களவைத் தேர்தல் நெருங்கும் நேரத்தில் அவசர அவசரமாக மத்திய அரசு இந்தத் திட்டத்தை செயல்படுத்தி இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். மக்களிடையே பிளவை ஏற்படுத்தும் எந்தவித நன்மையும் இல்லாத இந்தத் திட்டம் ரத்து செய்யப்பட வேண்டும் என்பதே தமிழக அரசின் நோக்கம் எனவும் தெரிவித்துள்ளார்.