பட்ஜெட் 2025!. வரி செலுத்துவோருக்கு ஜாக்பாட்!. புதிய வருமான வரி மசோதா அறிமுகம்?. மத்திய அரசு திட்டம்!
Budget 2025: இந்தியாவின் வரி முறையை எளிதாக்கும் முக்கிய நடவடிக்கையாக வரவிருக்கும் நாடாளுமன்ற பட்ஜெட்டில் புதிய வருமான வரி மசோதாவை மத்திய அரசு அறிமுகப்படுத்தும் என்று செய்திகள் வெளியாகியுள்ளன.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உரையுடன் வருகிற 31-ந் தேதி தொடங்குகிறது. இதைத் தொடர்ந்து பிப்ரவரி 1-ந்தேதி 2025-26-ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்கிறார். இது நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்யும் 8-வது பட்ஜெட் ஆகும். அதன்படி, மத்திய அரசு ஊழியர்களுக்கு 8-வது ஊதிய குழு ஊதிய உயர்வு உள்ளிட்டவை இந்த பட்ஜெட்டில் இடம் பெறுகிறது. இதனால் பட்ஜெட்டில் புதிய மாற்றங்கள் ஏற்படலாம் என்ற பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
மேலும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் உரையில் புதிய நேரடி வரி சட்டத்திற்கான மசோதாவை அறிமுகப்படுத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதாவது, 63 ஆண்டுகள் பழமையான வருமான வரி சட்டத்தை மாற்றுவதற்கான புதிய சட்ட விதிகள் குறித்து நிபுணர்கள் குழு தீவிர ஆய்வு செய்து வருகின்றனர். இந்த வரைவு சட்டத்தை தற்போது சட்ட அமைச்சகம் பரிசீலித்து வருவதாகவும், பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது பாதியில் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் வட்டாரங்கள் தெரிவித்தன.
புதிய வருமான வரி மசோதாவின் இலக்குகள்: தற்போதைய வருமான வரிச் சட்டத்தின் மொழி மற்றும் விதிகளை எளிமைப்படுத்தப்படும். வரி செலுத்துவோர் தெளிவு மற்றும் ஏற்றுக்கொள்ளலை அதிகரிப்பதன் மூலம் வழக்குகள் மற்றும் தகராறுகளைக் குறைக்கப்படும். காலாவதியான விதிகளை நீக்குதல் மற்றும் வரி நிர்வாகத்தை நவீனமயமாக்குதல். இணக்கத்தை எளிதாக்க அத்தியாயங்கள் மற்றும் பகுதிகளின் எண்ணிக்கையைக் குறைக்கவும். புதிய வரைவு சட்டத்தின் அளவை தோராயமாக 60 சதவீதம் குறைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.