பட்ஜெட் 2024: மக்களுக்கு ஏமாற்றம்..!! "கேஸ் மானியம், பெட்ரோல், டீசல் விலை குறைப்பு அறிவிப்பு இல்லை.." பொருளாதார நிபுணர்கள் கருத்து.!
2024 ஆம் வருடத்திற்கான மத்திய அரசின் பட்ஜெட் பாராளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்பட்டது. இந்த வருடத்திற்கான இடைக்கால பட்ஜெட் கூட்டத்தொடர் ஜனாதிபதி உரையுடன் நேற்று தொடங்கிய நிலையில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 6-வது முறையாக மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.
பாராளுமன்றத் தேர்தல் வருவதை முன்னிட்டு இந்த நிதியாண்டிற்கான பட்ஜெட் இடைக்கால பட்ஜெட்டாக தாக்கல் செய்யப்பட்டது. பாராளுமன்ற தேர்தல் வருவதற்கு 3 மாதங்களுக்கு முன் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதால் ஏழை மக்கள் மற்றும் நடுத்தர வர்க்கத்தினருக்கு சலுகைகள் அறிவிக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் தற்போது தாக்கல் செய்யப்பட்டிருக்கும் பட்ஜெட் பொதுமக்களுக்கு ஏமாற்றமாகவே அமைந்திருக்கிறது.
விவசாயத் துறையில் கூடுதல் முதலீடு ஏழைகளுக்கு வீடு கட்டித் தருதல் சோலார் பேனல் அமைப்போர்களுக்கு இலவச மின்சாரம் மற்றும் கர்ப்பப்பை தடுப்பூசி போன்ற திட்டங்கள் அறிவிக்கப்பட்டிருந்தாலும் ஏழை மற்றும் நடுத்தர மக்கள் எதிர்பார்த்த கேஸ் மானியம் பெட்ரோல் டீசல் விலை குறைப்பு வருமான வரியில் மாற்றம் பெண்களுக்கான ஓய்வூதியம் அரசு ஊழியர் சலுகைகள் என எந்த அறிவிப்பும் பட்ஜெட்டில் இடம் பெறவில்லை. இதனால் தற்போது தாக்கல் செய்யப்பட்டிருக்கும் இடைக்கால பட்ஜெட் ஏமாற்றம் அளிப்பதாக பொருளாதார நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.