அதிர்ச்சி செய்தி.. பூனையிடம் இருந்து 'புபோனிக் பிளேக்' நோய் பரவுமா.? அமெரிக்காவில் மீண்டும் ஒரு நபர் பாதிப்பு.!
அமெரிக்காவில் உள்ள ஓரிகானில் வசிக்கும் உள்ளூர் வாசி ஒருவருக்கு புபோனிக் பிளேக் நோய் இருப்பதாக பொது சுகாதார அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர். தனது வளர்ப்பு பூனையிடமிருந்து இந்த நோயை அவர் பெற்றிருக்கிறார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் உள்ள ஓரிகான் மாநிலத்தில் வசிக்கும் ஒரு நபருக்கு, புபோனிக் பிளேக் நோய் இருப்பதாக தெரியவந்துள்ளது. தனது வளர்ப்பு பூனையின் மூலமாக இந்த நோயை அவர் பெற்றதாக கூறப்படுகிறது. எனவே அந்த நபருக்கும், அந்த பூனைக்கும் தொடர்புடைய அனைவருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டதாக, டெஸ்சூட்ஸ் கவுண்டியின் சுகாதார அதிகாரி, டாக்டர் ரிச்சர்ட் ஃபாசெட் கடந்த வாரம் வெளியிட்ட ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.
அந்த நபருக்கு நோய் இருப்பது ஆரம்ப கட்டத்திலேயே கண்டுபிடிக்கப்பட்டதால், சிகிச்சை அளிக்கப்பட்டதாகவும், இது சமுதாயத்திற்கு சிறிய அளவை பாதிப்பை உண்டாக்க கூடும் என்றும் தெரிவித்துள்ளனர்.
திடீர் காய்ச்சல், குமட்டல், தசைவலி, பலவீனம் மற்றும் குளிர் ஆகியவை இந்த நோய்களுக்கான அறிகுறிகளாக கருதப்படுகிறது. இந்த நோயால் பாதிக்கப்பட்ட விலங்கிடம் வெளிப்பட்ட பின்பு, 2 முதல் 8 நாட்களில், அறிகுறிகள் தெரியக்கூடும்.
ஆரம்ப கட்டத்திலேயே இந்த நோயைக் கண்டறிந்து, சிகிச்சை அளிக்காவிட்டால், இரத்த ஓட்டம் மற்றும் நுரையீரல் தொற்றுக்கு இது வழிவகுக்கும். அந்த நிலையை அடைந்த பின்பு, இதற்கு சிகிச்சை அளிப்பது கடினமாகிவிடும். கடைசியாக கடந்த 2015 ஆம் ஆண்டு ஓரிகானில் புபோனிக் பிளேக் நோய் இருந்தது குறிப்பிடத்தக்கது.