BREAKING | நீட் தேர்வுக்கு என்னதான் தீர்வு..? யோசனை சொன்ன தவெக தலைவர் விஜய்..!!
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும், நடிகருமான விஜய் இரண்டாம் கட்டமாக நடைபெறும் மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கும் விழாவில் நீட் தேர்வுக்கு எதிராக பேசியுள்ளார்.
இந்நிகழ்வில் பேசிய தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், ”இன்று பேச வேண்டாம் என்று தான் நினைத்திருந்தேன். ஆனால், முக்கியமான ஒரு விஷயத்தைப் பற்றி பேசாமல் விட்டால் நன்றாக இருக்காது. அதுதான் நீட். தமிழ்நாட்டில் இருக்கும் மாணவ மாணவிகள், கிராமப் புறத்தில் இருக்கும் ஏழை, எளிய, பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட வகுப்பினைச் சேர்ந்த மாணவ மாணவிகள் மிகவும் பாதிக்கப்படுகிறார்கள் என்பது சத்தியமான உண்மை.
இந்த நீட் தேர்வை பொறுத்தவரை 3 பிரச்சனைகள் முக்கியமானவை. அதில் முக்கியமானது நீட் மாநில உரிமைக்கு எதிராக இருக்கிறது. 1975ஆம் ஆண்டுக்கு முன்னாள் கல்வி மாநிலப் பட்டியலில்தான் இருந்தது. 1975-க்குப் பிறகுதான் அதை ஒன்றியப் பட்டியலில் சேர்த்தார்கள். எனக்கு தெரிந்து முதல் பிரச்சனை அப்போது தான் தொடங்கியது. ஒரே நாடு, ஒரே பாடதிட்டங்கள், ஒரே தேர்வு இது அடிப்படையிலேயே கல்விக் கற்கும் நோக்கத்துக்கு எதிரானதாகவே பார்க்கிறேன்.
பொதுப் பட்டியலில் உள்ள கல்வியை மாநிலப் பட்டியலுக்கு கொண்டுவருவது தான் ஒரே தீர்வு. சிறப்பு பொது பட்டியலை உருவாக்கி கல்வி, சுகாதாரத்தை அதில் சேர்க்க வேண்டும். கல்வி என்பது அந்ததந்த மாநிலங்களுக்கு ஏற்றார்போல் இருக்க வேண்டும். இதை மாநில உரிமைகளுக்காக மட்டும் பேசவில்லை. கல்வி முறையில் பல்வேறு கண்ணோட்டங்கள், பல்வேறு பார்வைகள் இருக்க வேண்டும். அதற்கான முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். பன்முகத்தன்மை என்பது பல்வீனமல்ல. அதுதான் பலம்.