தவெக மாநாட்டில் தடுப்புகள் உடைப்பு.. ஆபத்தை உணராமல் ரயில் பாதையை கடந்து வரும் மக்கள்..!! - பரபரப்பு
நடிகரும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் நடத்தும் முதல் மாநில மாநாடு விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே உள்ள வி.சாலையில் மிகவும் பிரமாண்டமான முறையில் இன்று நடைபெற உள்ளது. விஜய்யின் முதல் மாநாடு என்பதாலும் விஜய்யை நேரில் பார்க்க வேண்டும் என்ற ஆசையிலும் ஏராளமான கட்சித் தொண்டர்கள், ரசிகர்கள் வி.சாலை நோக்கி கூட்டம் கூட்டமாக படையெடுத்து வருகின்றனர். நேற்றிரவு முதலே மாநாடு திடலுக்கு மக்கள் கூட்டம் திரண்டு வருகின்றனர்.
மாநாட்டில் 2 லட்சம் பேர் கலந்துகொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தவெக மாநாட்டால் 10 முதல் 15 கி.மீ. தூரத்திற்கு போக்குவரத்து ஸ்தம்பித்து உள்ளது. வி.சாலை பகுதியில் இருந்து முண்டியம்பாக்கம் வரை 10 கிலோ மீட்டர் தொலைவிற்கு அணிவகுத்து நிற்கும் வாகனங்கள் காரணமாக கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு உள்ளது. இதனால், மாற்றுப் பாதையில் வாகனங்களை இயக்க காவல்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.
நேரம் செல்ல செல்ல மக்கள் கூட்டம் அலை மோதுகிறது. இந்த நிலையில் தடுப்புகளை உடைத்து தொண்டர்கள் உள்ளே வர முயலுகின்றனர். அதனை தடுக்க காவல் துறையினர் எவ்வளவோ முயற்சி செய்தும் பல்வேறு வழிகள் வழியாக திடலுக்குள் நுழைவதால் போலீசார் திணறி வருகின்றனர். அதுமட்டுமல்லாமல் மாநாட்டு திடலுக்கு பின்புறம் உள்ள இரயில் தண்டவாளத்தை ஆபத்தை உணராமல் பொதுமக்கள் கடந்து வருகின்றனர்.
Read more ; தள்ளாடும் தவெக மாநாடு… படையெடுக்கும் மக்கள் கூட்டம்.. சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல்..!!