#BREAKING | செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கிடையாது..!! மனுவை தள்ளுபடி செய்து நீதிமன்றம் பரபரப்பு உத்தரவு..!!
செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுவை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
சட்டவிரோதப் பணப்பரிமாற்ற வழக்கில் கடந்த ஜூன் 14ஆம் தேதி அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையால் கைதாகினார். இந்த வழக்கில் ஜாமீன் கோரி செந்தில் பாலாஜி தரப்பில் ஏற்கனவே 2 முறை தாக்கல் செய்திருந்த மனுக்களை சென்னை முதன்மை அமா்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
இதையடுத்து, செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கோரி 3-வது முறையாக சென்னை முதன்மை அமா்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், கடந்த 200 நாள்களுக்கும் மேலாக அமைச்சா் செந்தில் பாலாஜி சிறையில் இருப்பதாலும், குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுவிட்டதாலும், அவரது உடல் நிலையைக் கருத்தில் கொண்டு ஜாமீன் வழங்க வேண்டுமென தெரிவிக்கப்பட்டிருந்தது.
அமலாக்கத்துறை சாா்பில், செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் வழங்கப்பட்டால் சாட்சியங்களை அழிக்க வாய்ப்புள்ளதாக கூறி வாதிட்டது. இதற்கு செந்தில் பாலாஜி தரப்பு, 180 நாள்களுக்கு மேல் சிறையில் இருப்பதால் அவரது உடல்நிலை மிகமெதுவாகவே சீராகி வருகிறது. சாட்சிகளின் வாக்குமூலம் மற்றும் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் நீதிமன்றத்தில் சமா்ப்பிக்கப்பட்டுள்ளது. எனவே சாட்சியங்களை அழிப்பதற்கான வாய்ப்பு இல்லை என தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி அல்லி, வழக்கின் தீா்ப்பு ஜன.12-ஆம் தேதி வழங்கப்படும் என தெரிவித்திருந்தார். இந்நிலையில், இன்று இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுவை மீண்டும் தள்ளுபடி செய்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.