BREAKING | காதல் ஜோடி ஆணவக் கொலை வழக்கு..!! வினோத்குமார் குற்றவாளி என தீர்ப்பு..!! தூக்கு தண்டனையா..?
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் சீரங்கராயன் ஓடை பகுதியைச் சேர்ந்தவர் கனகராஜ். இவர், வேறு சமூகத்தைச் சேர்ந்த வர்ஷினி பிரியா என்ற பெண்ணை காதலித்து வந்த நிலையில், வர்ஷினி பிரியா தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு கூறி கனகராஜின் வீட்டுக்கு சென்றுள்ளார். அப்போது கனகராஜின் குடும்பத்தார் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
பின்னர் கனகராஜ், வர்ஷினியுடன் சேர்ந்து சீரங்கராயன் ஓடை பகுதியில் வாடகை வீட்டில் தனி குடும்பம் நடத்தி வந்தனர். இதனால் ஆத்திரமடைந்த கனகராஜின் அண்ணன் வினோத், இருவரையும் தேடிச்சென்று அரிவாளால் சரமாரியாக வெட்டி ஆணவக் கொலை செய்தார். வர்ஷினி ப்ரியா உயிருக்கு ஆபத்தான நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
ஆணவக் கொலை செய்த வினோத்குமார் மேட்டுப்பாளையம் காவல் நிலையத்தில் சரணடைந்தார். மேலும், இந்த வழக்கில் 3 பேர் கைது செய்யப்பட்டிருந்தனர். கடந்த 2019ஆம் ஆண்டு இந்த சம்பவம் நடந்த நிலையில், இந்த வழக்கில் தற்போது தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த கொலை வழக்கில் வினோத் என்பவர் குற்றவாளி என கோவை நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
இந்த வழக்கில் கைதான 4 பேரில் 3 பேர் விடுதலை செய்யப்பட்ட நிலையில், வினோத்குமார் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. குற்றவாளி வினோத்குமாருக்கு மரண தண்டனை வரை கொடுக்கலாம் என்பதால், ஜனவரி 29ஆம் தேதி தண்டனை விவரம் அறிவிக்கப்படும் என கோவை நீதிமன்றம் தெரிவித்துள்ளது.