'மூளையை உண்ணும் அமீபா'!. 12 வயது சிறுவனுக்கு பாசிட்டிவ்!. கேரளாவில் 3-வது வழக்கு உறுதி!
amoeba: கோழிக்கோடு பகுதியைச் சேர்ந்த 12 வயது சிறுவனுக்கு, 'மூளையை உண்ணும் அமீபா'வால் ஏற்படும் அரிய மூளைத் தொற்றான அமீபிக் மெனிங்கோஎன்செபாலிடிஸ் பாதிப்பு இருப்பது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது .
கேரள மாநிலம், மலப்புரம் மாவட்டத்தில் உள்ள முன்னியூரைச் சேர்ந்த 5 வயது சிறுமி, மே 1ஆம் தேதி வீட்டிற்கு அருகே உள்ள குளத்தில் குளித்துள்ளார். அதனைத் தொடர்ந்து, சிறுமிக்கு அடுத்த 10 நாட்களுக்குள் காய்ச்சல், தலைவலி, வாந்தி போன்ற அறிகுறிகள் வந்துள்ளது. அதனைத் தொடர்ந்து, சிறுமியின் பெற்றோர் அவரை கோழிக்கோடு மருத்துவக் கல்லூரி தாய் சேய் நல மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர்.
அப்போது, சிறுமி அசுத்தமான தண்ணீரில் குளித்ததால், இந்த அரிய வகை அமீபிக் மெனிங்கோஎன்செபாலிடிஸ் என்ற நோயால் பாதிக்கப்பட்டது கண்டறியப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து, சிறுமியுடன் சேர்ந்து குளத்தில் குளித்த மற்ற 2 குழந்தைகளையும் கண்காணிப்பில் வைத்து பரிசோதித்துள்ளனர். ஆனால், மற்ற இருவருக்கும் நோய்த் தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்டு, அச்சிறுமிகள் இருவரும் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.
இதற்கிடையே, அமீபிக் நோயால் பாதிக்கப்பட்ட 5 வயது சிறுமி மே 13ஆம் தேதி முதல் கிட்டத்தட்ட ஒரு வாரத்திற்கு மேலாக வென்டிலேட்டர் மூலம் சிகிச்சை பெற்று வந்த நிலையில், தற்போது சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்தநிலையில், கோழிக்கோடு பகுதியைச் சேர்ந்த 12 வயது சிறுவனுக்கு, அசுத்தமான நீரில் காணப்படும் 'மூளையை உண்ணும் அமீபா'வால் ஏற்படும் அரிய மூளைத் தொற்றான அமீபிக் மெனிங்கோஎன்செபாலிடிஸ் பாதிப்பு இருப்பது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது . இந்த ஆண்டு மே மாதத்திலிருந்து கேரளாவில் வெளிப்படும் மூன்றாவது வழக்கு இதுவாகும்.
சிறுவனுக்கு சிகிச்சை அளிக்கப்படும் பேபி மெமோரியல் மருத்துவமனையின் மருத்துவர்களின் கூற்றுப்படி, 12 வயது சிறுவன் தனது வீட்டிற்கு அருகிலுள்ள குளத்தில் குளித்ததாக கூறினர், அங்கு அசுத்தமான நீர்நிலைகளில் வசிக்கும் அமீபாவால் சிறுவன் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்று கூறினர். மேலும், புதுச்சேரியில் உள்ள ஆய்வகத்திற்கு சோதனைக்காக சிறுவனின் மாதிரிகள் அனுப்பப்பட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர், மேலும் நோய்த்தொற்று இறப்பு விகிதம் 95-100 சதவிகிதம் இருப்பதால் சிறுவன் ஆபத்தான நிலையில் இருப்பதாகக் கூறினார்.
மலப்புரத்தைச் சேர்ந்த ஐந்து வயது சிறுமி அரியவகை நோயால் பாதிக்கப்பட்டு மே 21 அன்று இறந்தார். ஒரு மாதம் கழித்து, கண்ணூரைச் சேர்ந்த 13 வயது சிறுமியும் கொடிய நோய்த்தொற்றுக்கு இரையாகி ஜூன் 25 அன்று இறந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அமீபிக் மெனிங்கோஎன்செபாலிட்டிஸுக்கு எதிராக எச்சரிக்கையாக இருக்குமாறும், தேங்கி நிற்கும் நீரின் குளங்களில் குளிப்பதைத் தவிர்க்க வேண்டும் என்றும் மக்களுக்கு கேரள சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.
இந்த நோய் முதன்முதலாக 2023 மற்றும் 2017 ஆம் ஆண்டுகளில் ஆலப்புழா மாவட்டத்தில் பதிவாகியுள்ளது. காய்ச்சல், தலைவலி, வாந்தி, வலிப்பு போன்றவை இந்நோயின் முக்கிய அறிகுறிகள் ஆகும்.
Readmore: UGC NET தேர்வுக்கான புதிய தேதி அறிவிப்பு!. முழு விவரங்கள் இதோ!