மின்சாரம் தாக்கி சிறுவன், சிறுமி உயிரிழந்த விவகாரம்..!! பொதுமக்களுக்கு காவல்துறை வெளியிட்ட முக்கிய அறிவுரை..!!
கோவையில் மின்சாரம் தாக்கி சிறுவன், சிறுமி உயிரிழந்த விவகாரத்தில் பூங்காவில் மின்கசிவு ஏற்பட்டது எப்படி என்பது குறித்து போலீசார், மின்வாரியத்தினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை மாவட்டம் சரவணம்பட்டி அருகே துடியலூர் சாலையில் ராணுவ வீட்டுவசதி வாரியத்துக்கு சொந்தமான ராமன் விகார் என்ற அடுக்குமாடி குடியிருப்பு வளாகம் உள்ளது. இங்கு ஆந்திர மாநிலம் நெல்லூரை சேர்ந்த பிரசாந்த் ரெட்டி மகன் ஜியான்ஸ் ரெட்டி (4), நீலகிரி மாவட்டம் கோத்தகிரியை சேர்ந்த பாலசுந்தர் மகள் வியோமா பிரியா (8) ஆகிய குழந்தைகள் உள்பட 10-க்கும் மேற்பட்ட குழந்தைகள் மே 23ஆம் தேதி அவ்வாளகத்தில் உள்ள பூங்காவில் விளையாடி கொண்டிருந்தனர்.
அப்போது அங்கு உள்ள சறுக்கு விளையாட்டில் சிறுவன் ஜியான்ஸ் ரெட்டி, வியோமா பிரியா ஆகிய 2 பேர் விளையாடிக் கொண்டிருந்த போது, இருவர் மீதும் மின்சாரம் தாக்கியது. பின்னர், அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், இருவருமே உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இப்பூங்கா, கடந்த 4 மாதங்களுக்கு முன்பு திறக்கப்பட்டுள்ளது. அப்பகுதியில் மின் விளக்கு அமைக்க, தரைக்கு அடியில் மின் வயர்கள் மூலம் மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. அந்த மின் வயர்கள் கடந்த 4 மாதங்களுக்கு முன்பாகவே சரிவர பராமரிக்காததால் சேதப்பட்டு இருந்தாக கூறப்படுகிறது.
மேலும், இச்சம்பவம் குறித்து அப்பூங்காவில் மின்வாரிய அதிகாரிகள் வியாழக்கிழமை ஆய்வு நடத்தினர். மேலும், துணை ஆணையர் ஸ்டாலின் தலைமையிலான போலீஸாரும் அங்கு சென்று ஆய்வு செய்தனர். சரிவர பராமரிக்காத மின்வயரில் இருந்து மின்கசிவு ஏற்பட்டது தான் காரணமா? என இருதரப்பினரும் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். மின்சாரம் தாக்கி உயிரிழந்த ஜியான்ஸ் ரெட்டி, வியோமா பிரியா ஆகியோரின் உடல்கள் நேற்று (மே 24) பிரேதப் பரிசோதனைக்கு பின் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.
பொதுமக்களுக்கு அறிவுரை: கோவை மாநகர காவல்துறையினர் வெளியிட்ட செய்திக்குறிப்பில், ”அடுக்குமாடி குடியிருப்புகளில் வசிப்பவர்கள் தங்களது குடியிருப்புகளில் உள்ள மின்மாற்றிகள், பூங்காக்கள், பிற கட்டிடங்களில் உள்ள மின் இணைப்புகள் அனைத்தும் பாதுகாப்பான முறையில் பொருத்தப்பட்டுள்ளதா? வயர்கள் சேதமின்றி உள்ளதா? என்பதை உறுதி செய்ய வேண்டும். மழைக்காலங்களில் மின்கசிவு ஏற்படுவதை தடுக்க எலக்ட்ரீசியன்கள், மின்வாரிய ஊழியர்களை கொண்டு பராமரிப்புப் பணிகளை மேற்கொள்ள வேண்டும்.
ஈரக் கைகளால் மின் இணைப்புகளை தொடக்கூடாது. இடி, மின்னல், மழை நேரங்களில் மின்சாதன பொருட்களை தேவையில்லாமல் உபயோகப்படுத்த கூடாது. மின்சாதன பொருட்களை உபயோகித்த பின்னர், மின் இணைப்பில் இருந்து துண்டித்து வையுங்கள். ஈரப்பதம் உள்ள சுவர்களில் இருக்கும் பிளக் பாயிண்ட்களை உபயோகிப்பதை தவிர்க்க வேண்டும். வீடுகளில் மின்பழுது தொடர்பான பிரச்சனை வந்தால், அதை தன்னிச்சையாக சரி செய்யக்கூடாது” உள்ளிட்ட அறிவுரைகளை வழங்கியுள்ளன.