வயது ஒத்துழைக்கவில்லை!... ஓய்வை அறிவித்தார் குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம்!
இந்தியாவின் நட்சத்திர குத்துச்சண்டை வீராங்கனையான மேரி கோம், அனைத்து விதமான போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
மேரி கோம் மணிப்பூர் மாநிலத்தைச் சேர்ந்த ஒரு குத்துச் சண்டை வீராங்கனை. இவருக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். இவர் உலக மகளிர் குத்துச்சண்டை போட்டியில் தொடர்ச்சியாக 6 முறை தங்கப்பதக்கம் வென்ற முதல் இந்தியாவின் வீராங்கனை என்ற பெருமை கொண்டவர். 2012 லண்டன் கோடை கால ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொள்ள தெரிவு செய்யப்பட்ட இந்தியாவின் ஒரேயொரு குத்துச்சண்டை வீராங்கனை இவராவார். இதில் 51 கிலோ எடைப் பிரிவில் போட்டியிட்டு வெண்கலப் பதக்கத்தை வென்றார். லண்டன் ஒலிம்பிக்கில் வெண்கலம், 5 முறை ஆசிய சாம்பியன் பட்டத்தையும் அவர் வென்றுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில் “என் இதயத்திலிருந்து நான் சொன்னால், நான் இன்னும் ஏதாவது செய்ய வேண்டும் என்ற பசியுடன் இருக்கிறேன்” என்று மேரி கோம் கூறினார். “நான் இன்னும் நாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்தி போட்டியிட விரும்புகிறேன். ஆனால் வயது வரம்பு காரணமாக இந்த ஆண்டு முதல் என்னால் போட்டியிட முடியவில்லை என்று ஒரு நிகழ்வில் கூறினார். 40 வயது வரை மட்டுமே ஆடவர் மற்றும் மகளிர் குத்துச்சண்டையில் விளையாட முடியும்.
குத்துச்சண்டை மட்டுமல்லாது விளையாட்டு துறையில் சாதிக்க துடிக்கும் இந்தியாவின் இளம் விளையாட்டு வீராங்கனைகளுக்கு மேரி கோம் தான் இன்ஸ்பிரேஷன். அவரை போல சாதிக்க வேண்டுமென்ற பெருங்கனவுடன் பலர் பயிற்சி செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.