எதற்கெல்லாம் தம்பதியினர் விவாகரத்து பெறலாம்? இந்திய சட்டம் சொல்வது என்ன?
ஆணோ பெண்ணோ, நிரந்தரமாக ஒரு திருமண வாழ்வு மகிழ்ச்சியளிக்கக்கூடியதல்ல என அறிந்த பிறகும், அந்தத் திருமண உறவில் தொடர்வது என்பது அவசியமற்றது. ஒரு பெண், தன்மீது செலுத்தப்படும் அடக்குமுறைகளைத் தாங்கிக்கொள்வதும், ஒரு ஆண் தனக்கு இழைக்கப்படும் அநீதியைப் பொறுத்துக்கொள்வதும், அவசியமின்றி அவரவர் நலனுக்காகப் பிரிவது என முடிவுசெய்யும்பட்சத்தில், அதற்கு நியாயமான வரையறைகளுடன் சட்டம் உறுதுணையாயிருக்கிறது.
கணவன்-மனைவி இருவருக்கும் விவாகரத்து பெறுவதற்கான சம உரிமை இருக்கிறது. 1995 இந்து திருமணச் சட்டத்தின் 13 ஆவது பிரிவில், தம்பதிகள் எதற்கெல்லாம் விவாகரத்து பெற முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில், விவாகரத்து கோருவதற்கு சில காரணங்கள் சட்டரீதியாக அனுமதிக்கப்படுகின்றன.
- உடலாலும் மனதாலும் கொடுமைப்படுத்துதல்.
- திருமண உறவைத் தாண்டிய தவறான உறவுமுறை.
- தகுந்த காரணமின்றி பிரிந்து செல்லுதல். அதாவது, கணவனோ அல்லது மனைவியோ பிரிந்துசென்று, இரண்டு ஆண்டுகள் வரை ஒன்றாக இணையவில்லையெனில், இந்தக் காரணத்தைக்கொண்டு விவாகரத்து கோரலாம். (கிறிஸ்தவர்கள், இந்தக் காரணத்துக்காக மட்டும் விவாகரத்து பெற முடியாது.)
- திருமணம் செய்துகொள்ளும்போது, கணவனோ மனைவியோ தான் பின்பற்றிவந்த மதத்தைவிடுத்து, வேறு ஒரு மதத்தைப் பின்பற்றினால், மற்றொருவர் விவாகரத்து கோரலாம்.
- இருவரில் ஒருவருக்கு மனநலப் பாதிப்பு, மனநலம் சம்பந்தப்பட்ட நோய் ஆகியவை இருப்பின், விவாகரத்துக்கு விண்ணப்பிக்கலாம். இதைப் போதிய காரணமாக சட்டம் ஏற்றுக்கொள்ளும்.
- தொழுநோய். (இதை ரத்துசெய்யும் சட்டத் திருத்த மசோதா நாடாளுமன்ற மேலவையில் நிலுவையில் உள்ளது.)
- இருவரில் ஒருவருக்கு எய்ட்ஸ் போன்ற குணப்படுத்த முடியாத பாலியல் தொற்றுநோய் இருப்பின், விவாகரத்து பெற முடியும்.
- உலக வாழ்வைத் துறந்து துறவு மேற்கொள்ளுதல்.
- கணவனோ அல்லது மனைவியோ எங்கு இருக்கிறார் அல்லது உயிருடன் இருக்கிறாரா என்பதுகூட ஏழு ஆண்டுகள் வரை கேள்விப்படாமல் இருக்கும்பட்சத்தில், அவர் இறந்திருக்கக்கூடும் என்ற அனுமானத்தின் அடிப்படையில் விவாகரத்து செய்வது.
- தற்காலிக நீதிமன்றப் பிரிவை அல்லது சேர்ந்து வாழ்தலுக்கான மனுவின் மீதான தீர்ப்புக்குப் பிறகு, ஓர் ஆண்டுக்குமேல் ஒன்று சேராமல் இருத்தல் என்பது விவாகரத்துக்கு ஏற்றுக்கொள்ளப்படும் காரணம் ஆகும்.
- இந்தியச் சட்டத்தின்படி, ஏதாவது கிரிமினல் குற்றத்துக்காக ஏழு ஆண்டுகள் வரை கடுங்காவல் தண்டனை பெற்றால், அதன்பொருட்டு விவாகரத்து பெறலாம்.
- ஆண்மையற்று இருந்தாலோ, திருமண உறவில் உடலுறவில் ஈடுபடாமல் இருந்தாலோ, அதற்காக விவாகரத்து கோரலாம்.
- திருமணமான கணவன் ஓரினப்புணர்ச்சி, விலங்குகளுடன் புணர்ச்சி (Bestiality) போன்ற குற்றம் செய்தால், அதன் காரணமாக விவாகரத்து செய்ய மனைவிக்கு உரிமை வழங்கப்படுகிறது.
Read more ; வரலாற்றில் முதல் முறையாக சபாநாயகர் தேர்தல் ; வேட்பாளரை அறிவித்த இந்தியா கூட்டணி!!