இந்தியாவின் முக்கிய அருங்காட்சியகங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்!… பலத்த பாதுகாப்பு!
இந்தியா முழுவதுமே கடந்த சில நாள்களாக வெடிகுண்டு மிரட்டல் சம்பவங்கள் அதிகரித்துள்ளன. இவை பெரும்பாலும் வதந்தியாக உள்ளன. கர்நாடக மாநிலத்தில் சமீபத்தில் பல்வேறு பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. அதன் காரணமாக அன்றைய நாள் முழுவதும் பள்ளிகள் மூடப்பட்டன. இதேபோல், கர்நாடகா மாநில ஆளுநர் மாளிகைக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்து, கைது செய்யப்பட்டார்.
உத்தர பிரதேச மாநிலம், அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோயிலுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதேபோல், மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவின் தல்தலா பகுதியில் உள்ள இந்தியன் அருங்காட்சியகம் உள்ளது. இந்த அருங்காட்சியகத்தில் வெடிகுண்டு வெடிக்கும் என நேற்று காலை கொல்கத்தா போலீஸாருக்கு மின்னஞ்சல் வந்தது.
‘டெரரைசர்ஸ் 111’ குழு என்ற பெயரில் இருந்து இந்த மிரட்டல் மின்னஞ்சல் வந்தது. இதையடுத்து போலீஸார் மற்றும் வெடிகுண்டு தடுப்பு பிரிவினர் அருங்காட்சியகத்துக்கு விரைந்து சென்று அங்கிருந்த ஊழியர்கள், பார்வையாளர்களை வெளியேற்றினர். மேலும், அருங்காட்சியகத்தில் யாரும் நுழை 2 மணி நேரம் தடை விதிக்கப்பட்டது. சோதனையின் முடிவில் வெடிகுண்டு எதுவும் கைப்பற்றப்படவில்லை.
இந்தநிலையில் மும்பையில் உள்ள 8 அருங்காட்சியங்களில் வெடிகுண்டு வெடிக்கும் என்று போலீசாருக்கு மின்னஞ்சல் வந்துள்ளது. கொலாபாவில் உள்ள சத்ரபதி சிவாஜி மகாராஜ் அருங்காட்சியகம் மற்றும் வொர்லியில் உள்ள நேரு அறிவியல் மையம் உட்பட மும்பை முழுவதும் உள்ள எட்டு அருங்காட்சியங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. பி.டி.ஐ செய்தி நிறுவனத்தின் அறிக்கையின்படி, பைகுல்லா உயிரியல் பூங்காவைத் தாக்கப்போவதாக அந்த மின்னஞ்சலில் மிரட்டல் விடுக்கப்பட்டிருந்தது.
இதையடுத்து, நகரின் முக்கிய நிறுவல்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. போலீசார் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனையில் ஈடுபட்டனர், ஆனால் எதுவும் கைப்பற்றப்படவில்லை. அருங்காட்சியக நிர்வாகம் அளித்த புகாரின் அடிப்படையில், கொலாபா காவல் நிலையத்தில் அடையாளம் தெரியாத நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.