பாலிவுட் நடிகர் சைஃப் அலிகானுக்கு கத்திக்குத்து!. மருத்துவமனையில் அறுவை சிகிச்சை!. வீட்டில் கொள்ளை முயற்சியின்போது நிகழ்ந்த பகீர்!.
Saif Ali Khan: மும்பையில் வீட்டில் கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட கொள்ளையர்கள் பாலிவுட் நடிகர் சைஃப் அலிகானை கத்தியால் குத்திவிட்டு தப்பிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புகழ்பெற்ற பாலிவுட் காதல் ஜோடிகளாக இருந்து திருமண தம்பதிகளாக மாறியவர்கள் சைஃப் அலிகான் மற்றும் கரீனா கபூர். பாலிவுட்டின் மூத்த மற்றும் முன்னணி நடிகராக வலம் வருபவர் சைஃப் அலிகான். இவரது நடிப்பில் அண்மையில் தெலுங்கில் ‘தேவரா’ படம் வெளியானது. பாலிவுட்டில் தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் மும்பையில் உள்ள தனது வீட்டில் இரவு சைஃப் அலி கான் உறங்கிக் கொண்டிருந்தபோது, நள்ளிரவு 2 மணி அளவில் அடையாளம் தெரியாத மர்ம நபர் ஒருவர் திருட முயற்சித்துள்ளார்.
இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பணிப்பெண், கொள்ளையனை தடுத்துள்ளார். இதையடுத்து, கொள்ளையன் பணிப்பெண்ணை தாக்க முயன்றதால் அவர் கூச்சலிட்டுள்ளார். சத்தம் கேட்டு ஓடி வந்த சைஃப் அலிகானை கொள்ளையன் 2,3 முறை கத்தியால் குத்திவிட்டு தப்பிச் சென்றதாகவும், இதில் சைஃப் அலிகான் மனைவி கரீனா கபூருக்கு காயம் ஏற்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. தொடர்ந்து, சைஃப் அலிகான் மும்பையில் உள்ள லீலாவதி தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக பந்த்ரா காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து கொள்ளையனை தேடி வருகின்றனர்.
முதற்கட்ட தகவலின்படி, புதன்கிழமை இரவு அடையாளம் தெரியாத நபர் ஒருவர் நடிகரின் வீட்டிற்குள் ஊடுருவியுள்ளார். திருடனைப் பார்த்ததும் அவரது வீட்டு ஊழியர்கள் சத்தமிட்டனர், அதன் பிறகு சைஃப் எழுந்தார். இந்த சம்பவத்தின் போது திருடன் பிடிபட்டுவிடுவோமோ என்ற அச்சத்தில் அவருக்கு காயம் ஏற்பட்டது. சைஃப் அலிகானின் உடல் நிலை குறித்து மருத்துவர்கள் கூறுகையில், அவருக்கு ஆறு காயங்கள் உள்ளன, அவற்றில் இரண்டு ஆழமானவை. காயங்களில் ஒன்று அவரது முதுகெலும்புக்கு அருகில் உள்ளது. அவருக்கு அறுவை சிகிச்சை செய்து வருகிறோம். அறுவைசிகிச்சைக்குப் பிறகுதான் சேதத்தின் அளவை நாங்கள் கூறுவோம் என்று தெரிவித்தனர்.