முக்கிய செய்திகள்தேசிய செய்திகள்மாவட்டம்உலகம்சிறப்பு கட்டுரைகள்சினிமா 360°
ஆரோக்கியமான வாழ்வு | பெண்கள் நலம்
அரசியல்அறிய வேண்டியவைதொழில்நுட்பம்விளையாட்டுஆன்மீகம்வணிகம்
Advertisement

இதுக்கு முடிவே இல்லையா? கன்னித்தீவு கதை போல மதுராந்தகம் ஏரி சீரமைப்பு பணிகளும் நீளுகிறது..!! - ராமதாஸ் கண்டனம்

BMK founder Dr. Ramadoss has insisted that compensation of Rs 1 lakh per acre should be given to the farmers for the rehabilitation of Madhuranthakam Lake, which is the story of Virgin Island.
01:58 PM Oct 28, 2024 IST | Mari Thangam
Advertisement

கன்னித்தீவு கதையாக நீளும் மதுராந்தகம் ஏரி சீரமைப்பு பணி, ஏக்கருக்கு ரூ.1 லட்சம் உழவர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்...

Advertisement

சோழர் காலத்தில் கட்டப்பட்ட தமிழ்நாட்டின் மிகப்பெரிய ஏரிகளில் ஒன்றான மதுராந்தகம் ஏரியை தூர்வாரி சீரமைக்கும் பணிகள் நான்காண்டுகள் ஆகியும் இன்னும் நிறைவடையவில்லை. கன்னித்தீவு கதை போல நீளும் சீரமைப்புப் பணிகளால் கடந்த நான்காண்டுகளாக பயிர் சாகுபடி செய்யமுடியாமல் பெரும் வருவாய் இழப்புக்கு ஆளாகியுள்ளனர். ஆனால், இதுகுறித்த அக்கறையும், கவலையும் சிறிதும் இல்லாமல் ஏரி சீரமைப்புப் பணிகளை தமிழக அரசின் நீர்வளத்துறை தாமதப்படுத்தி வருவது கண்டிக்கத்தக்கது.

பொன்னியின் செல்வன் என்று போற்றப்பட்ட இராஜராஜ சோழனின் மூத்த சகோதரரான மதுராந்தகன் என்றழைக்கப்பட்ட உத்தமசோழனின் ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்ட மதுராந்தகம் ஏரியின் மொத்த பரப்பளவு 2908 ஏக்கர் ஆகும். இதில் 2231 ஏக்கர் பரப்பு நீர்த்தேக்கப் பகுதியாக உள்ளது. மதுராந்தகம் ஏரியின் மொத்தக் கொள்ளளவு 694 மில்லியன் கன அடி ஆகும். ஆனால், பல ஆண்டுகளாக ஏரி தூர்வாரப்படாத நிலையில், கொள்ளளவு பாதியாக குறைந்து விட்டது. மழைக்காலத்தில் நிரம்பி வழியும் ஏரி, கோடைக்காலத்தில் வறண்டு விடும் அளவுக்கு கொள்ளளவு குறுகி விட்டது.

இந்த நிலையை மாற்றி ஏரியை முழுமையாகத் தூர்வாரி, முழுக் கொள்ளளவை மீட்டெடுப்பதுடன், அதில் கிடைக்கும் மண்ணைக் கொண்டு கரைகளை வலுப்படுத்துவதன் மூலம் ஏரியின் கொள்ளளவை 791 மில்லியன் கன அடியாக அதிகரிப்பதற்கான திட்டம் கடந்த அதிமுக ஆட்சியில் அறிவிக்கப்பட்டது. அத்திட்டத்திற்காக 2021&ஆம் ஆண்டு பிப்ரவரியில் ரூ.120 கோடி நிதி ஒதுக்கப்பட்டு, ஜூன் மாதத்தில் பணிகள் தொடங்கப்பட்டன.

திட்ட ஒப்பந்தத்தின்படி, மதுராந்தகம் ஏரியை தூர்வாரி, சீரமைத்து கொள்ளளவை அதிகரிக்கும் பணிகள் 24 மாதங்களில், அதாவது 2023&ஆம் ஆண்டு மே மாதத்திற்குள் நிறைவடைந்திருக்க வேண்டும். அதன் மூலம் 2023&ஆம் ஆண்டு வடகிழக்குப் பருவமழை மூலம் கிடைக்கும் நீரை தேக்கி வைத்து பாசனத்திற்கு பயன்படுத்தலாம் என்பது தான் திட்டம். ஆனால், 41 மாதங்கள் ஆகியும், 2024&ஆம் ஆண்டு வடகிழக்குப் பருவமழை தொடங்கியும் கூட மதுராந்தகம் ஏரியை தூர்வாரும் பணிகள் இன்னும் நிறைவடையவில்லை.

பணிகள் தொடங்கப்பட்டு நான்காண்டுகள் ஆகும் நிலையில் இன்னும் மதுராந்தகம் ஏரியின் கரைகளை உயர்த்தி கான்க்ரீட் கதவணைகள் அமைக்கும் பணிகள் மட்டுமே நடைபெற்று வருகின்றன. இந்தப் பணிகள் முடிவடைந்த பிறகு தான் தூர் வாரி, ஏரியை ஆழப்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று கூறப்படுகிறது. இந்த பணிகள் அனைத்தும் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதத்திற்குள் முடிக்கப்படும் என்று அதிகாரிகள் கூறினாலும் கூட, அதற்கு வாய்ப்பே இல்லை என்று உழவர்கள் தரப்பில் கூறப்படுகிறது.

சீரமைப்புப் பணிகள் தாமதமாகிக் கொண்டே செல்வதால் எப்போதும் நீர் நிரம்பி காணப்படும் மதுராந்தகம் ஏரி இப்போது வறண்ட பாலைவனம் போல காட்சியளிக்கிறது. அதுமட்டுமின்றி, மதுராந்தகம் ஏரியை நம்பியுள்ள வேளாண் விளைநிலங்களில் விவசாயம் பாதிக்கப்பட்டிருப்பதுடன், வயல்வெளிகளில் கருவேல மரங்கள் வளரத் தொடங்கி விட்டன. அந்த மரங்களை அகற்றி மீண்டும் சாகுபடி செய்வதற்கே அதிக காலம் வேண்டும்.

மதுராந்தகம் ஏரியில் தேக்கி வைக்கப்படும் நீரைக் கொண்டு கடப்பேரி, கத்திரிச்சேரி, மதுராந்தகம் உட்பட 36 கிராமங்களில், மொத்தம் 2,853 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. மதுராந்தகம் ஏரியிலிருந்து வெளியேற்றப்படும் உபரி நீர் அருங்குணம், மாரிபுத்தூர், திருவாதூர், நெசப்பாக்கம், கடுக்கப்பட்டு பெரிய ஏரி, நெல்வாய்பாளையம், மேல்பட்டு, மலையம்பாக்கம், பொன்னேரிதாங்கல் உள்ளிட்ட, 30 ஏரிகளில் நீர் நிரப்பி வைக்கப்பட்டு, அதைக் கொண்டு 4,000 ஏக்கருக்கும் கூடுதலான நிலங்கள் பாசன வசதி பெருகின்றன.

மதுராந்தகம் ஏரியை தூர்வாரும் பணிகள் முடிவடைந்த பிறகு அதன் கொள்ளளவு 791 மில்லியன் கன அடியாக உயரும் என்பதால் பாசன வசதி பெறும் நிலங்களின் பரப்பும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், பணிகள் இன்னும் முடிக்கப்படாததால் கருவேல மரங்கள் வளரத் தொடங்கிய நிலங்கள், நெல் சாகுபடிக்கு பயன்படாத தரிசு நிலங்களாக மாறி விடும் ஆபத்து ஏற்பட்டுள்ளது.

மதுராந்தகம் ஏரி சீரமைப்புப் பணிகள் தாமதமாவதால், வேளாண்மை மட்டுமின்றி குடிநீர் வழங்கலும் பாதிக்கப்பட்டிருக்கிறது. மதுராந்தகம் ஏரியை நம்பி முப்போகம் சாகுபடி செய்து வந்த விவசாயிகள், வாழ்வாதாரத்தையும் இழந்து, குடிநீருக்கும் திண்டாடும் நிலைமை இனியும் தொடர அனுமதிக்கக்கூடாது.

பல்லாயிரக்கணக்கான உழவர்களின் வாழ்வாதாரமாக திகழும் மதுராந்தகம் ஏரியை தூர்வாரி, சீரமைக்கும் பணிகள் விரைவுபடுத்தப்பட வேண்டும். வரும் ஜூன் மாதத்திற்குள் பணிகளை முடிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். நடப்பாண்டையும் சேர்த்து தொடர்ந்து 4 ஆண்டுகளாக மதுராந்தகம் ஏரி பாசன நிலங்களில் சாகுபடி பாதிக்கப்பட்டிருப்பதாலும், வயல்களில் வளர்ந்துள்ள கருவேல மரங்களை அகற்ற வேண்டியிருப்பதாலும் ஏக்கருக்கு ஆண்டுக்கு ரூ.25,000 வீதம் நான்காண்டுகளுக்கு சேர்த்து ஏக்கருக்கு ரூ.1 லட்சம் வீதம் உழவர்களுக்கு இழப்பீடு வழங்க தமிழக அரசு முன்வர வேண்டும் என்று வலியுறுத்துகிறேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Read more ; சிகரெட்டால் சூடு.. பிறப்புறுப்பில் கத்தி குத்தி..!! வரதட்சணைக்காக இளம் பெண் கொடூர கொலை.. பகீர் சம்பவத்தின் பின்னணி என்ன?

Tags :
BMK RamadossfarmersMadhuranthakam Lakestory of Virgin Island
Advertisement
Next Article