அனுமதியின்றி தடுப்பணை கட்டும் பணிகள்..! பசுமை தீர்ப்பாயம் வைத்த குட்டு..! அப்படியே ரிவேர்ஸ் எடுத்த கேரளா அரசு…!
சிலந்தி ஆறு என்பது தேனாரின் துணை நதியாகும். இது மூணாரின் மேற்கு சரிவு பகுதிகளில் உற்பத்தியாகி, அமராவதி ஆற்றில் கலக்கிறது. அமராவதி ஆற்றில் கலக்கும் இந்த சிலந்தி ஆற்றின் நீர் சுமார் 222 கிமீ பயணித்து கரூர் மாவட்டம் மாயனூர் அருகே திருமுக்கூடலில் காவிரி ஆற்றில் கலக்கிறது. தமிழகத்தின் திருப்பூர், கரூர் ஆகிய மாவட்டங்களில் 55 ஆயிரம் ஏக்கரில் உள்ள விவசாய நிலத்துக்கு பாசன நீர் வரத்துக்கு கேரளாவின் இடுக்கி மாவட்டத்தில் உள்ள பெருகுடா பகுதியில் பாயும் சிலந்தி ஆறே உதவுகிறது. இந்த ஆற்றின் நீரை நம்பி தான் ஆயிரக்கணக்கான விவசாய குடும்பங்கள் உள்ளது.
இந்த நிலையில் தான், சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டும் பணிகளை கேரள அரசு செயல்படுத்தி வருவதாக தகவல் வெளியானது. தமிழக விவசயிகளான வாழ்வாதாரத்திற்கு இந்த சிலந்தி ஆற்றில் தடுப்பணை கட்டப்பட்டால் அது பெரிய இழப்பை ஏற்படுத்தும். சிலந்தி ஆற்றின் குறிப்பிட்ட அந்த இடத்தில் 10 அடி உயரத்தில் 120 அடி நீளத்துக்கு தடுப்பணை கட்டப்பட்டால், அதற்கு அடுத்து உள்ள பகுதிகளுக்கு தண்ணீர் வரத்து என்பது தடைப்படும். இதனால் சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதற்காக் கேரள அரசுக்கு தமிழக அரசியல் தலைவர்கள் உள்பட பலரிடம் இருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியது.
கேரளா அரசின் இந்த தடுப்பணை கட்டப்படும் பணியை கைவிட வேண்டும் என்று கேரளா முதலவர் பினராய் விஜயனுக்கு தமிழக முதல்வர் முகா.ஸ்டாலின் கடிதம் எழுதினார். மேலும் தமிழகத்தின் உரிமையை சட்டரீதியாக மட்டுமல்லாமல் அனைத்து விதத்திலும் நிலைநாட்டுவோம் என தமிழக நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் தெரிவித்து இருந்தார்.
இந்த சிலந்தி ஆற்றில் தடுப்பணை கட்டப்படும் விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், நாளிதழில் வந்த செய்திகளின் அடிப்படையில் தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம் தாமாக முன்வந்து இந்த வழக்கை விசாரித்தது. அமர்வின் நீதித்துறை உறுப்பினர் புஷ்பா சத்யநாராயணா, தொழில்நுட்ப உறுப்பினர் கே.சத்யகோபால் ஆகியோர் விசாரணை மேற்கொண்டனர். தமிழக அரசு சார்பில் பதில் மனு அளிக்கப்பட்டது.
சிலந்தி ஆற்றின் நடுவே நடக்கும் கட்டுமானப் பணிகளை நிறுத்த உத்தரவிட வேண்டும். இந்த கட்டுமானத்தால் தமிழகம் பாதிக்கப்படும் என தமிழக அரசு சார்பில் கூறப்பட்டது. இதனையடுத்து கேரளா அரசு சார்பில், சிலந்தி ஆற்றில் தடுப்பணை எதுவும் கட்டப்படவில்லை. நீரை தடுத்து உள்ளூர் மக்களுக்கு தேவையான தண்ணீர் தேவையை பூர்த்தி செய்வதற்கான கலிங்கு தான் அமைக்கப்பட்டு வருகிறது. தடுப்பணை கட்டப்பட்டால் முறையான அனுமதி பெற்ற பிறகே நிறைவேற்றப்படும்'' என தெரிவிக்கப்பட்டது.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட தீர்ப்பாய உறுப்பினர்கள், சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை அமைப்பதற்கு மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம், தேசிய வன விலங்குகள் வாரியத்திடம் கேரள அரசு அனுமதி வாங்க வேண்டும் எனவும், இந்த அனுமதி பெற்றால் மட்டுமே அத்திட்டத்தை தொடர அனுமதி வழங்க முடியும். உரிய அனுமதி பெறாமல் சிலந்தி நதியில் மேற்கொள்ளப்படும் கட்டுமானப் பணிகளை உடனடியாக நிறுத்த வேண்டும்'' என உத்தரவிட்டது. மேலும், வழக்கின் மீதான அடுத்தக்கட்ட விசாரணை ஜூலை 23-ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.