'வன்முறை செய்கிற இந்துக்கள்தான் பாஜகவினர்'..!! பிரதமர் மோடி, அமித்ஷாவை விளாசிய ராகுல் காந்தி..!!
லோக்சபாவில் பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, ராஜ்நாத்சிங் உள்ளிட்டோரை ஆவேசப்பட எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியின் சரமாரியான பேச்சு.
மக்களவை எதிர்க்கட்சித் தலைவரான பின்னர் ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தில் பேசிய ராகுல் காந்தி, பாஜக- பிரதமர் மோடியை மிக கடுமையாக விமர்சித்தார். அவது பேச்சுக்கு உடனுக்குடன் எழுந்து பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, ராஜ்நாத்சிங் பதிலளித்தனர்.
ராகுல் காந்தி பேச்சின் முக்கிய அம்சங்கள் :
- * எதிர்க்கட்சியாக இருப்பதில் பெருமைப்படுகிறோம். மகிழ்ச்சி அடைகிறோம். அதிகாரத்தை விட உண்மைதான் சக்தி வாய்ந்தது. எங்களுக்கு அதிகாரம் முக்கியமே அல்ல.
* சிவனின் இடதுதோள் ஓரமாக திரிசூலத்தை பிடித்திருக்கிறார். திரிசூலம் என்பதே வன்முறையின் சின்னம் அல்ல. அகிம்சையின் சின்னம். (சிவபெருமானின் படம் அல்ல எந்த ஒரு படத்தையும் காட்ட கூடாது என்பதுதான் அவை விதி - சபாநாயகர்)
* பிரதமர் மோடிதான் கடவுளுடன் நேரடித் தொடர்பில் இருக்கிறார். கடவுளுடன் நேருக்கு நேர் பேசிக் கொண்டிருக்கிறார். பிரதமர் மோடி கடவுளின் அவதாரம்.
* ராமர் பிறந்த அயோத்தியிலேயே பாஜகவுக்கு மக்கள் பாடம் புகட்டிவிட்டனர். அயோத்தி பற்றி பேசத் தொடங்கியதும் மைக் அணைக்கப்பட்டது ஏன்? அயோத்தியில் மக்களிடம் இருந்து பறிக்கப்பட்ட நிலங்களுக்கு இழப்பீடு வழங்கவில்லை. அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழாவுக்கு உள்ளூர் மக்களை அழைக்கவில்லை.
* ஒட்டுமொத்த இந்துக்களும் பாஜகவோ, பிரதமர் மோடியோ பிரதிநிதி அல்ல. பாஜக 24 மணிநேரமும் வெறுப்பையே பரப்புகிறது. இந்து மதம் வெறுப்பை போதிக்கவில்லை.
உண்மையான இந்து தர்மத்தை பாஜக பின்பற்றவில்லை. சகிப்புத்தன்மை இல்லாத இந்துக்கள்தான் பாஜகவினர். வன்முறை செய்கிற இந்துக்கள்தான் பாஜகவினர். இந்துக்கள் வன்முறையை விரும்பாதவர்கள். ஆனால், பாஜகவினரோ அதற்கு நேர் எதிராக உள்ளனர். (இந்துக்களை வன்முறையாளர்களாக சித்தரிப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது என பிரதமர் மோடி பதில்).
* பிரதமர் மோடியின் உத்தரவால் என் மீது தாக்குதல் நிகழ்த்தப்பட்டது. இன்றும் பல தலைவர்கள் சிறையில் உள்ளனர். அமலாகத்துறையால் 55 மணிநேரம் விசாரணைக்குள்ளாக்கப்பட்டேன். அதை மகிழ்ச்சியாக ஏற்றுக் கொண்டேன். என் எம்பி பதவியை பறித்தனர். என் எம்பி இல்லத்தை பறித்தனர்” என்று ராகுல் காந்தி பேசினார்.