12 மாநிலங்களில் தனித்து ஆட்சி செய்யும் பாஜக..!! காங்கிரஸ் எத்தனை மாநிலங்களில் தெரியுமா..?
4 மாநில சட்டப்பேரவை தேர்தல் முடிவுகளால், பாஜக தனித்து ஆளும் மாநிலங்களின் எண்ணிக்கை 12ஆக உயர்ந்துள்ளது. காங்கிரஸ் ஆட்சி செய்யும் மாநிலங்களின் எண்ணிக்கை 3 ஆக குறைந்துள்ளது.
உத்தரப்பிரதேசம், உத்தரகாண்ட், ஹரியாணா, குஜராத், கோவா, அசாம், திரிபுரா, மணிப்பூர், அருணாச்சலப் பிரதேசம், மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் பாஜக தனித்து ஆட்சி செய்து வருகிறது. சமீபத்தில் நடைபெற்ற ஐந்து மாநில சட்டப்பேரவை தேர்தல்களில், 4 மாநில முடிவுகள் நேற்று வெளியாகின. இதில், மத்தியப் பிரதேசத்தில் பாஜக ஆட்சியை தக்க வைத்துள்ளது.
சத்தீஸ்கர், ராஜஸ்தானில் பாஜக மீண்டும் ஆட்சியை கைப்பற்றியுள்ளது. இதன் மூலம் பாஜக தனித்து ஆளும் மாநிலங்களின் எண்ணிக்கை 12ஆக உயர்ந்துள்ளது. இதோடு மகாராஷ்டிரா, மேகாலயா, நாகாலாந்து மற்றும் சிக்கிம் ஆகிய மாநிலங்களில் கூட்டணி ஆட்சியில் பாஜக அங்கம் வகித்து வருகிறது. ராஜஸ்தான் மற்றும் சத்தீஸ்கர் சட்டப்பேரவை தேர்தல்களில் தோல்வியடைந்து, தெலங்கானாவில் மட்டும் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது.
எனவே, கர்நாடகா, இமாச்சலப் பிரதேசம் மற்றும் தெலங்கானா ஆகிய 3 மாநிலங்கள் மட்டும் காங்கிரஸ் தனித்து ஆட்சி செய்யும் மாநிலங்கள் ஆகும். இது தவிர பீகார், ஜார்கண்ட் கூட்டணி அரசில் காங்கிரஸ் அங்கம் வகிக்கும். இந்த தேர்தல் முடிவுகள் மூலம் வட இந்தியாவில் மிகப் பெரிய எதிர்கட்சியாக ஆம் ஆத்மி உருவெடுத்துள்ளது.
டெல்லி, பஞ்சாப்பில் ஆட்சி செய்யும் கட்சியாக ஆம் ஆத்மி உள்ளதால், வட இந்தியாவில் மிகப் பெரிய எதிர்கட்சி ஆம் ஆத்மி என அக்கட்சியின் மூத்த தலைவர் ஜாஸ்மின் ஷா எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளார். அடுத்தாண்டில் சிக்கிம், அருணாச்சலப் பிரதேசம், ஒடிசா மற்றும் ஆந்திராவில் சட்டப்பேரவை தேர்தல்கள் நடைபெறவுள்ளன. ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவை தேர்தலும் நிலுவையில் உள்ளது.
சமீபத்தில் நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தல்களில் பல எம்.பிக்கள் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளதால், அவர்களின் மக்களவை தொகுதிகள் காலியாகும். அடுத்தாண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ளதால், தற்போது காலியாகும் மக்களவை தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்பில்லை.