அடுத்த 3-5 ஆண்டில் தமிழக பாஜக ஒரு முக்கிய அரசியல் சக்தியாக மாறும்...! பிரசாந்த் கிஷோர் அதிரடி கருத்து...!
வரும் மூன்று அல்லது ஐந்து ஆண்டுகளில், தமிழகத்தில் பாஜக ஒரு முக்கிய அரசியல் சக்தியாக மாறிவிடும் என பிரசாந்த் கிஷோர் கருத்து தெரிவித்துள்ளார்.
பிரபல தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர், தென்னிந்தியாவில் பாஜக எவ்வாறு விரைவில் ஆட்சியைப் பிடிக்க முடியும் என்பது குறித்த தனது கருத்துக்களை தனியார் நிகழ்ச்சியில் பங்கேற்று வெளிப்படுத்தியுள்ளார். இந்தியாவின் சமகால அரசியலைப் பற்றி விவாதிக்க சென்னையில் நடைபெற்ற விழாவில் பங்கேற்ற பேசிய அவர்; தெற்கில் குறிப்பாக தமிழகத்தில் பாஜக எப்படி இருக்கும் என்று பேசினார்.
கேள்வி நேரத்தின் போது, கூட்டத்தில் இருந்து ஒருவர் அண்ணாமலை தலைமையிலான தமிழக பாஜக ஒரு காலத்தில் அரசியல் ரீதியாக என்ன மாதிரியான மாற்றத்தை ஏற்படுத்தும் எழுப்பிய கேள்விக்கு அவர் அளித்த பதில்; வரும் ஆண்டுகளில் தமிழகத்தில் பாஜக வளர்ச்சியடையக்கூடும் என்று நேரடியாகவே கூறினார்.
பதினைந்து நாட்களில் பாஜக தேர்தலில் வெற்றி பெறும் என்று நான் கூறவில்லை. அதற்கு நேரம் தேவை, ஆனால் அவர்கள் சரியான திசையில் செல்கிறார்கள். அடித்தளம் புத்திசாலித்தனமாக உள்ளது, வரும் மூன்று அல்லது ஐந்து ஆண்டுகளில், தமிழகத்தில் பாஜக ஒரு முக்கிய அரசியல் சக்தியாக மாறிவிடும் என்று நான் பார்க்கிறேன். மக்கள் நம்புவதை விட தமிழகத்தில் பாஜக வலுவாக இருக்கும்" என்று கருத்து தெரிவித்துள்ளார்.
பிரசாந்த் கிஷோரின் I-PAC என்னும் நிறுவனம் மூலம் 2021 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் திமுக மீண்டும் ஆட்சிக்கு வர தேவையான தேர்தல் வியூகங்களை அமைத்து கொடுத்தார். ஏறக்குறைய பத்தாண்டு காலம் எதிர்க்கட்சியாக இருந்த திமுக, பிரசாந்த் கிஷோர் மூலமாகத்தான் மீண்டும் ஆட்சிக்கு வந்தது என்ற விமர்சனங்களை இன்று வரை எதிர்க்கட்சிகள் முன்வைக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.