பா.ஜ.க-வின் அடுத்த தேசிய தலைவர் யார்...? புதிய தலைவரை டிசம்பருக்குள் நியமிக்க முடிவு...!
பாரதிய ஜனதா கட்சியின் தேசிய தலைவர் ஜேபி நட்டாவின் பதவிக்காலம் முடிவடைந்தது. அவரது பதவிக்காலம் ஜூன் 2024 வரை நீட்டிக்கப்பட்டாலும், இப்போது அவருக்கு மத்திய அமைச்சர் பொறுப்புகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதனால், புதிய தலைவரைத் தேடும் முயற்சியில் பாஜக ஈடுபட்டுள்ளது.
இந்த ஆண்டு டிசம்பருக்குள் புதிய தேசிய தலைவரை நியமிக்க பாஜக இலக்கு வைத்துள்ளது. இந்த பதவிக்கான தேர்தல் பணிகள் ஆகஸ்ட் 1-ம் தேதி தொடங்கும். தேசிய தலைவர் தேர்தலுக்கு முன், மாவட்ட மற்றும் மாநில பிரிவுகளை பலப்படுத்தி, விரிவான உறுப்பினர் சேர்க்கை நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பா.ஜ.க.வின் புதிய தேசிய தலைவரை தேர்வு செய்வதற்கான பணி ஆகஸ்ட் 1ம் தேதி துவங்கும். முதற்கட்டமாக, உறுப்பினர் சேர்க்கை துவங்கப்பட்டு, செப்டம்பர் 15-ம் தேதி வரை நடக்கிறது. இதை தொடர்ந்து, தீவிர உறுப்பினர் சேர்க்கை பிரச்சாரம் செப்டம்பர் 16 முதல் செப்டம்பர் 30 வரை நடக்கிறது. அக்டோபர் 1 முதல் அக்டோபர் 15 வரை, செயலில் உள்ள உறுப்பினர்களின் சரிபார்ப்பு நடத்தப்படும்.
பாஜக கட்சியின் விதி படி, ஒவ்வொரு உறுப்பினரும் ஒன்பது ஆண்டுகளுக்கு ஒருமுறை தங்கள் உறுப்பினர்களை புதுப்பிக்க வேண்டும். இந்த ஆண்டு, உறுப்பினர் சேர்க்கை பிரச்சாரத்தில் பிரதமர், கட்சித் தலைவர் மற்றும் அனைத்துக் கட்சித் தலைவர்களும் தங்கள் உறுப்பினர்களை புதுப்பிக்க வேண்டும். நவம்பர் 1 முதல் நவம்பர் 15 வரை, பாஜக மண்டல் தலைவர்களுக்கான தேர்தல்களை நடத்துகிறது. இதைத் தொடர்ந்து மாவட்டத் தலைவர் தேர்தல் நவம்பர் 16 முதல் நவம்பர் 30 வரை நடைபெறுகிறது.
மாநிலத் தலைவர்களுக்கான தேர்தல் பணிகள் டிசம்பர் 1-ம் தேதி தொடங்கும். 50 சதவீத மாநிலங்களில் தேர்தல் முடிந்ததும், தேசியத் தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்கான அதிகாரப்பூர்வ பணிகள் தொடங்கும் என சொல்லப்படுகிறது. இந்த நிலையில் அடுத்த தேசிய தலைவர் யார் என்ற எதிர்பார்ப்பு தற்பொழுது அரசியல் வட்டாரத்தில் எழுந்துள்ளது.