திமுகவின் வாக்கு வங்கியை உடைக்க பாஜக வியூகம்... கட்டம் கட்டப்பட்ட 8 திமுக தலைகள் யார்?
நாடாளுமன்ற தேர்தல் மற்றும் சட்டமன்ற தேர்தல் காரணமாக தமிழகத்தில் தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. அதைவிட அதிகமாக, பாஜகவின் வியூகங்கள் அனலை கிளப்பிவிட்டு வருகின்றன. குறிப்பாக திமுகவுக்கு எல்லா வகைகளிலும் செக் வைப்பதற்கான முயற்சியையும் பாஜக மேற்கொள்ளப்போவதாக, தகவல்கள் வெளியாகி உள்ளது.
அதாவது, திமுக மற்றும் திமுக கூட்டணி சார்பில் களமிறங்கும் வேட்பாளர்களில் சிலரின் வெற்றியைத் தடுக்க வேண்டும் என்றே நினைக்கிறதாம் பாஜக. குறிப்பாக, கனிமொழி, டி.ஆர்.பாலு, தயாநிதிமாறன், ஆ.ராசா, ஜெகத்ரட்சகன், திருமாவளவன், கார்த்தி சிதம்பரம் (ப.சிதம்பரத்தின் மகன்), வெங்கடேசன் ஆகியோரை குறி வைக்கிறதாம். இவர்கள் மறுபடியும் நாடாளுமன்றத்துக்குள் வரக்கூடாது என்றும் திட்டமிடுகிறதாம்.
அதனால்தான், இவர்களின் தொகுதியில், நடக்கும் பணப்பட்டுவாடா, தேர்தல் செலவுகள் உள்ளிட்டவற்றை கண் கொத்தி பாம்பாக கவனிக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டிருக்கிறது.
ஒரு வேட்பாளர் அதிகப்பட்சமாக செலவளிக்கலாம் என தேர்தல் ஆணையம் நிர்ணயித்துள்ள தொகைக்கு அதிகமாக செலவு செய்திருப்பதை ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கும் வகையில், செலவின பார்வையாளர்கள் ஆதாரங்களை எடுக்க வேண்டும் என்றும் கூடுதலாக உத்தரவிடப்பட்டுள்ளதாம்.
அதேபோல, ஓட்டுக்கு பணம் கொடுத்தால் ஆதாரப்பூர்வமாக கையும் களவுமாக பிடிக்க வேண்டும் என்றும் ரகசிய உத்தரவு பறந்துள்ளதாக தெரிகிறது. அடுத்து என்ன நடக்க போகிறதென்று பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.