விஜயை தொடர்ந்து ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்தார் அண்ணாமலை..!! என்ன விஷயம்..?
அண்ணா பல்கலை மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தில் உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தமிழக ஆளுநர் ரவியை பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலை நேரில் சந்தித்தார்,
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் கடந்த 23ஆம் தேதி கல்லூரி மாணவி ஒருவர், பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து இச்சம்பவத்தில் ஈடுபட்ட ஞானசேகரன் என்பவரை கோட்டூர்புரம் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இந்த சம்பவத்திற்கு அ.தி.மு.க., பா.ஜ.க., த.வெ.க. தலைவர் விஜய் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் பலரும் கண்டனங்களை தெரிவித்தனர்.
இதற்கிடையே, சம்பவம் குறித்த எப்.ஐ.ஆர்., வெளியாகி, அதில் மாணவியின் பெயர் விவரங்களும் வெளியாகி பெரும் சர்ச்சை கிளம்பியது. அரசியல் கட்சியினர் பலரும் கண்டனம் தெரிவித்தனர். அ.தி.மு.க.,- பா.ஜ., உள்ளிட்ட கட்சியினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். நடந்த சம்பவம், எப்.ஐ.ஆர்., வெளியானது தொடர்பாக, தேசிய மகளிர் ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது. இதற்கிடையே, பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி, தமிழக கவர்னர் ரவியை சந்தித்து பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலை இன்று மாலை வலியுறுத்தினார். முன்னதாக, இன்று மதியம் த.வெ.க., தலைவர் நடிகர் விஜயும் கவர்னரை சந்தித்து இதே கோரிக்கையை வலியுறுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.