BJP| காங்கிரசுக்கு வாக்களித்த பாஜக எம்எல்ஏ.! கர்நாடகாவில் பரபரப்பு.!
கர்நாடக மாநிலத்தில் ராஜ்யசபா உறுப்பினர்களுக்கான தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியை(BJP) சேர்ந்த எம்எல்ஏ காங்கிரஸ் கட்சியின் வேட்பாளருக்கு வாக்களித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
இந்திய நாடாளுமன்றத்தில் காலியாக உள்ள ராஜ்ய சபா உறுப்பினர்களை நியமிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. சமீபத்தில் கூட தமிழகத்தைச் சேர்ந்த மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் மத்திய பிரதேச மாநிலத்திலிருந்து மீண்டும் ராஜ்யசபா உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார். மேலும் காங்கிரஸ் கட்சியின் சோனியா காந்தியும் ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து மாநிலங்களவை உறுப்பினராக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் பல மாநிலங்களில் ராஜ்யசபா உறுப்பினர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். ஒன்றுக்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் வேட்பு மனு தாக்கல் செய்திருந்த மாநிலங்களில் மட்டும் ராஜ்ய சபா தேர்தல் இன்று நடைபெற்றது. கர்நாடக மாநிலத்தில் உள்ள நான்கு ராஜ்யசபா தொகுதிகளுக்கான தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் மூன்று வேட்பாளர்களும் பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த ஒருவரும் வேட்பு மனு தாக்கல் செய்திருந்த நிலையில் மஜக கட்சியை சேர்ந்த ஒருவரும் வேட்பு மனு தாக்கல் செய்ததால் அங்கு ராஜ்யசபா உறுப்பினர்களுக்கான தேர்தல் நடைபெற்றது.
அங்கு நடைபெற்ற ராஜ்ய சபா தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த எம்எல்ஏ எஸ்டி சோமசேகர்(ST Somashekar) என்பவர் கட்சி மாறி காங்கிரஸ் உறுப்பினருக்கு வாக்களித்ததாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இதனைத் தொடர்ந்து பாஜக எம்எல்ஏ-விற்கு கர்நாடக முதல்வர் சித்தராமையா நன்றி தெரிவித்திருக்கிறார். காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்கள் பாரதிய ஜனதா கட்சியில் ஐக்கியமாகி வரும் நிலையில் பாஜகவை சேர்ந்தவர் காங்கிரசிற்கு வாக்களித்திருப்பது அரசியல் வட்டாரங்களில் பரபரப்பு ஏற்படுத்தியிருக்கிறது.